தாய்நாட்டிற்கு 100 பில்லியன் டாலரை அனுப்பிவைத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள்

தாய்நாட்டிற்கு 100 பில்லியன் டாலரை அனுப்பிவைத்த வெளிநாடுவாழ் இந்தியர்கள்

2 mins read
37f87838-c5bc-4c81-a4b0-ecb88a43daeb
-

வெளிநாடுவாழ் இந்தியர்கள்தான் நாட்டின் உண்மையான தூதர்கள் என்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2022ஆம் ஆண்டில் மட்டும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாய்நாட்டுக்கு அனுப்பிவைத்த தொகை கிட்டத்தட்ட நூறு பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது என்று 'பிரவாசி பாரதிய திவஸ்' எனப்படும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தின மாமநாட்டில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

இந்தத் தொகையானது முந்திய ஆண்டைவிட சுமார் 12 விழுக்காடு அதிகம் என்றும் அவர் சுட்டினார்.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள்களையும் இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு சேவைகளையும் பயன்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்த நிதியமைச்சர், இதன் மூலம் அவை உலகளவில் பிரபலமடையும் என்றும் புதிய வர்த்தக வாய்ப்புகள் உருவாகும் என்றும் கூறினார்.

"கொரோனா நெருக்கடிக்குப் பிறகான ஓராண்டு காலத்தில் தாயகம் திரும்பிய இந்தியத் தொழிலாளர்கள் மீண்டும் வெளிநாடுகளுக்குச் செல்ல மாட்டார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால், ஏராளமான இந்தியர்கள் பயனுள்ள பணிகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் சென்றதுடன் அல்லாமல் ஓராண்டுக்குள் இந்தியாவுக்கு அவர்கள் அனுப்பிய தொகையும் 12% அளவு அதிகரித்துள்ளது.

"தகவல் தொழில்நுட்பம், மின்னிலக்கத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த இந்தியர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இதன் மூலம் அறிவாற்றல், முன்னேற்றத்தின் உலகளாவிய மையமாக இந்தியா மாறி வருகிறது," என்றார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

இந்தியாவில் உள்ள சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்ட அவர், சீனா, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அப்பாற்பட்டு, பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலும் தங்களுடைய தொழிற்சாலைகளை நிறுவலாம் என்ற கருத்தை இந்திய அரசு வலுவாக முன்னிறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

அடுத்த 25 ஆண்டுகளில் கட்டமைப்பு, முதலீடு, புத்தாக்கம், ஒருங்கிணைப்பு ஆகிய நான்கு கூறுகளில் இந்தியா கவனம் செலுத்த உள்ளதாகவும் நிதியமைச்சர் கூறினார்.