தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மீண்டும் திறக்கப்படும் இந்தியாவின் ‘பொன் நகர்’ கோலார் தங்கச் சுரங்கம்

2 mins read
1c0e95b1-140a-4701-b679-cdd7835c18a6
கோலார் தங்க வயலில் உற்பத்தி துவங்கியவுடன், ஆண்டுதோறும் 750 கிலோ தங்கம் கிடைக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். - கோப்புப்படம்: ஊடகம்

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கோலார் தங்க வயல் மீண்டும் திறக்கப்படுகிறது.

சுதந்திர இந்தியாவில், கடந்த 80 ஆண்டுகளில், மூடப்பட்ட தங்கச்சுரங்கம் ஒன்று திறக்கப்படுவது இதுவே முதன்முறை.

கடந்த 2001ஆம் ஆண்டு இந்தச் சுரங்கம் மூடப்பட்டது. கோலார் தங்கச் சுரங்கம் (கேஜிஎஃப்) இந்தியாவின் பொன் நகர் என்றும் குறிப்பிடப்படுகிறது.

இம்முறை வரலாற்றையும் நவீன சுரங்கத் தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து, தங்க வயலில் சுரங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

‘பாரத் கோல்டு மைன்ஸ்’ நிறுவனத்துக்குச் சொந்தமான 1,003 ஏக்கர் பரப்பளவில் சுரங்கக் கழிவுகள் உள்ளன. மேல்மட்டச் சுரங்கப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக இந்திய அரசு ஒரு திட்டத்தை உருவாக்கியது.

இதை கர்நாடக மாநில அமைச்சரவை ஏற்றுக்கொண்டதை அடுத்து, கோலார் தங்கச் சுரங்கம், 24 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது.

கைவசம் உள்ள கழிவுகளில் சுரங்கப் படிமங்கள் உட்பட, ஏராளமான தங்கமும் கலந்துள்ளது.

மொத்தம் உள்ள 3.20 கோடி டன் கழிவுப்பொருள்கள் மூலம் 23 டன் தங்கம் வரை கிடைக்கும்.

முழு அளவிலான உற்பத்தி துவங்கியவுடன், ஆண்டுதோறும் 750 கிலோ தங்கம் கிடைக்கும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

முன்புபோல ஆழமான சுரங்க நடைமுறைகளுக்கு மாறாக, இந்த முறை மேல்மட்டப் படிவங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது என்றும் நவீன கால தொழில்நுட்பத்தைக் கொண்டு தங்கம் எடுக்கப்பட உள்ளது என்றும் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேஜிஎஃப் சுரங்கங்கள், குறைந்த லாபம் மட்டுமே ஈட்டியதாகக் கூறி, 2001ஆம் ஆண்டு மூடப்பட்டன.

குறிப்புச் சொற்கள்