பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சியை வெற்றிபெறச் செய்தால், ஆட்சி அமைத்த ஒரு மணி நேரத்துக்குள் அம்மாநிலத்தில் உள்ள மதுவுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை அகற்றப்படும் என ஜன் சுராஜ் கட்சித் தலைவராக பொறுப்பேற்க உள்ள பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வியூக நிபுணரான அவர், அடுத்த மாதம்தான் புதுக்கட்சி தொடங்க உள்ளார்,
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமது கட்சி, தேர்தலுக்காகத் தயாராகி வந்ததாக சனிக்கிழமையன்று தலைநகர் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார்.
பீகார் மாநிலத்தில் உள்ள 243 தொகுதிகளிலும் தமது கட்சி போட்டியிட இருப்பதாக அவர் கூறினார்.
கடந்த வியாழக்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அக்டோபர் 2ஆம் தேதிக்குள் தாம் புதுக்கட்சியைத் தொடங்கப்போவதாக அவர் அறிவித்திருந்தார்.
குறைந்தபட்சம் ஒரு கோடி மக்களின் ஆதரவுடன் தாம் செயல்படப் போவதாகவும் இதன் காரணமாக கூட்டணி அமைக்க அவசியம் எழாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியிருந்தார்.
“மதுவிலக்குச் சட்டம் என்பது முதல்வர் நிதிஷ் குமாரின் ஏமாற்று வேலை. இதனால் வீடுகளுக்கு நேரடி மது விநியோகம் நடந்து வருகிறது.
“மதுவிலக்கால் அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய 20 ஆயிரம் கோடி ரூபாய் கலால் வரியும் கிடைக்காமல் போய்விட்டது.
தொடர்புடைய செய்திகள்
“சட்டவிரோத மது விற்பனையால் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பயனடைந்து வருகின்றனர்,” என்று பிரசாந்த் கிஷோர் மேலும் கூறியுள்ளார்.

