புதுடெல்லி: பாகிஸ்தானில் இயங்கிவரும் பயங்கரவாத முகாம்களை அழிக்க இந்தியா ஒருபோதும் தயங்காது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவு இனி இப்படித்தான் இருக்கும் என்றார் அவர்.
ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீரில் உள்ள பெஹல்காமில் அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் 26 பேர் மாண்டனர்.
பாகிஸ்தானின் ஆதரவுடன் காஷ்மீர் பயங்கரவாதிகள் செயல்பட்டு வருவதாக இந்தியா நீண்டகாலமாகவே கூறி வருகிறது.
பெஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மே 7ல் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடத்தப்பட்டது.
இதில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டதாகவும் பயங்கரவாதிகள் பலர் மாண்டதாகவும் இந்தியா தெரிவித்தது.
இந்நிலையில், ஆப்பரேஷன் சிந்தூருக்குப் பிறகு திங்கட்கிழமை (மே 12) பிரதமர் மோடி தொலைக்காட்சியில் பேசினார்.
தொடர்புடைய செய்திகள்
பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்திருப்பதாக அவர் கூறினார்.
“இனி பாகிஸ்தானுடன் பேசினால் அது பயங்கரவாதம் தொடர்பானதாகவே இருக்கும். பாகிஸ்தானுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டால் அது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரைப் பற்றியதாகவே இருக்கும்,” என்றார் பிரதமர் மோடி.
இந்தியப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் போர் நிறுத்தத்துக்குப் பாகிஸ்தான் அழைப்பு விடுத்ததாகத் திரு மோடி தெரிவித்தார்.
“இனி பயங்கரவாதத்துக்குத் துணை போக, இந்தியாவுக்கு எதிராக ராணுவத்தைப் பயன்படுத்த போவதில்லை என்று பாகிஸ்தான் கூறியது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்து நாங்கள் பரிசீலித்தோம்,” என்றார் பிரதமர் மோடி.
இனி இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.