டெல்லியில் நடுங்க வைக்கும் குளிரிலும் குடியரசு தின ஒத்திகை

1 mins read
055991d3-b174-4faa-9f84-d39bf8cec78a
இந்தியாவின் 77வது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்டுகிறது. - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

புதுடெல்லி: டெல்லியில் நடுங்க வைக்கும் குளிரிலும் குடியரசு தின சாகச நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகையில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர்.

இந்தியாவின் ஒற்றுமையையும் சமத்துவத்தையும் பறைசாற்றும் 77ஆவது குடியரசு தினம் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை என முப்படைகளின் அணிவகுப்பு, அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு ஆகியவையும் அப்போது நடைபெறும்.

இதேபோன்று, பல்வேறு மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் இடம்பெறும்.

குடியரசு தின விழாவையொட்டி, ராணுவ வீரர்கள் உள்ளிட்ட இந்திய ஆயுதப் படைகள் டெல்லியில் இதற்கு முன்னர் ராஜ்பாத் என்று அழைக்கப்பட்டு, கடமைப் பாதை எனப் பெயர் மாற்றம் கண்ட பாதையில் கடும் குளிருக்கு மத்தியில், குடியரசு தின அணிவகுப்புக்கான ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து பனிப்பொழிவும் அதிகரித்து வருகிறது. பனிமூட்டமும் அதிகமாகக்காணப்படுகிறது.

இதனால், மக்கள் வாகனங்களை மெதுவாக இயக்குவதுடன், செல்லும்போது முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர்.

இவற்றுடன், காற்று மாசும் அதிகரித்து மக்களை சிரமப்படுத்தி வருகிறது. சுவாசப் பாதிப்பு, நோய் தொற்றுக்கு ஆளாகக் கூடிய நிலை ஆகியவற்றில் சிக்கி டெல்லி மக்கள் தவிக்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்