குடியரசு தினப் பதற்றம்: ராஜஸ்தானில் பதுக்கிவைக்கப்பட்ட 9,550 கிலோ வெடிபொருள்

2 mins read
3349f33e-4b97-4d81-91d8-e92385cc94e4
187 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட வெடிபொருளை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டனர். - படம்: டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஜெய்ப்பூர்: இந்தியக் குடியரசு தினம் கொண்டாடப்படும் வேளையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகமான வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த மாநிலத்தின் நாகவூர் மாவட்டத்தில் வெடிமருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை (ஜனவரி 24) இரவு அதிகாரிகள் அந்த மாவட்டத்தின் ஹார்சவுர் கிராமத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அந்தக் கிராமத்தில் உள்ள பண்ணை ஒன்றின் வயல்வெளியில் 9,550 கிலோகிராம் அமோனியம் நைட்ரேட் வெடிமருந்து 187 சாக்குமூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பாக சுலைமான் கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரி மிருதுள் கச்சாவா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 25) கூறினார். அந்த ஆடவருக்கு எதிராக ஏற்கெனவே மூன்று குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதற்கு முன்னர் நிகழ்ந்த பெரிய வெடிப்புச் சம்பவங்களில் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, 2025 நவம்பரில் தலைநகர் புதுடெல்லியின் செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிப்பில் அந்த ரசாயனம் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அமோனியம் நைட்ரேட் தவிர, பெரிய அளவிலான வெடிப்புக் கருவிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஒன்பது பெட்டிகளில் டெட்டனேட்டர் கருவியும் 24 பெட்டிகளில் வெடிமருந்து இணைப்பு மின்கம்பிகளும் இருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

அரசாங்க அனுமதி பெற்ற, அனுமதி பெறாத சுரங்கப் பணிகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்துவோருக்கு வெடிமருந்துகளை விநியோகம் செய்ததாக, கைது செய்யப்பட்ட ஆடவர் கூறினார்.

மேலும், அவருக்கு உடந்தையாக வேறு யாரும் செயல்படுகின்றனரா என்பதை அறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்