புதுடெல்லி: முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தனஞ்சய சந்திரசூட் அரசு இல்லத்திலிருந்து வெளியேறுவதை உறுதிசெய்யும்படி இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
புதுடெல்லியின் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியிலுள்ள அந்த இல்லம் பதவியிலுள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கானது.
கடந்த 2024 நவம்பர் மாதத்தில் பதவி ஓய்வுபெற்ற பின்னரும் திரு சந்திரசூட் இன்னும் அதே இல்லத்தில் இருந்து வருகிறார். இவ்வாண்டு மே 31ஆம் தேதிவரை அவர் அவ்வில்லத்தில் வசிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக சந்திரசூட் 2022 நவம்பர் இலிருந்து 2024 நவம்பர் வரை பணியாற்றினார்.
இந்நிலையில், தனிப்பட்ட காரணங்களுக்காகத் தாம் அரசு இல்லத்திலிருந்து வெளியேறத் தாமதமாவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்றபின் தமக்கு அரசாங்கம் ஒதுக்கியுள்ள வீடானது பல்லாண்டுகாலமாகப் பயன்படுத்தப்படாததால் அதனை வாழத் தகுந்த வீடாகப் புதுப்பிப்பதற்கு அதிகக் காலம் தேவைப்படுவதாகத் திரு சந்திரசூட் விளக்கமளித்துள்ளார். அத்துடன், சிறப்புத் தேவை உடைய தம் இரு மகள்களுக்கு ஏற்ற மாற்று வீட்டைத் தேடுவதில் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

