ஹைதராபாத்: தெலுங்கானா சுரங்கப்பாதை கட்டுமானப் பணியின் போது இடிந்து விழுந்ததை அடுத்து, இந்திய ராணுவம் தங்கள் பொறியியல் பணிக்குழுவை அனுப்பி அங்கு சிக்கியிருக்கும் தொழிலாளர்களை மீட்கும் முயற்சிகளில் இணைந்துள்ளது.
தெலுங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் இடது கரை சுரங்கப்பாதை சனிக்கிழமை காலை 8:30 மணியளவில் இடிந்து விழுந்ததில் எட்டுத் தொழிலாளர்கள் இன்னும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், சுரங்கப்பாதையின் இடிந்து விழுந்த பகுதிக்குள் செல்ல முயன்ற மீட்புக் குழுவினர், மேலும் உள்ளே செல்ல முடியாததால் திரும்பிவிட்டனர்.
“சேறு காரணமாக அந்த இடத்தை அடைவது கடினமாக உள்ளது,” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மாநிலப் பேரிடர் மீட்புப் படையின் மீட்புப் பணியாளர்களில் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறும்போது, “சுரங்கப்பாதையின் உள்ளே விபத்து நடந்திருக்கும் பகுதிக்குச் செல்ல வாய்ப்பில்லை. சுரங்கப்பாதையின் கூரை முற்றிலுமாக இடிந்து விழுந்துவிட்டது. மேலும், மண் முழங்கால் அளவுக்கு மூடப்பட்டுள்ளது. இதற்கு வேறு முயற்சிகளைத்தான் நாங்கள் எடுக்க வேண்டும்,” என்று தெரிவித்தார்.
இடிந்து விழுந்த இடத்தில் மீட்புப் பணிகளில் இந்திய ராணுவமும் இணைந்தது. மீட்புப் பணிகளுக்கு அதன் பொறியாளர் பணிக்குழு (ETF) உதவி வருவதாக ஏஎன்ஐ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இந்தச் சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேசினார்.
மாநில அரசுக்குத் தேவையான எந்த உதவிக்கும் மத்திய அரசு கைகொடுக்கும் என்று பிரதமர் மோடி அவருக்கு உறுதியளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சனிக்கிழமை இரவு முதல்வர் ரேவந்த் ரெட்டி, சுரங்கப்பாதை இடிந்து விழுந்த இடத்தில் உள்ள நிலைமை குறித்து மாநில அமைச்சர்களிடம் ஆய்வு செய்து விசாரித்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.
“தெலுங்கானாவில் சுரங்கப்பாதை கூரை இடிந்து விழுந்தது என்பதை அறிந்ததும் மிகவும் வருத்தமடைந்தேன். இந்த கடினமான நேரத்தில் உள்ளே சிக்கியவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் நானும் உள்ளேன்,” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாநில அரசும் பேரிடர் நிவாரணக் குழுக்களும் இணைந்து ஆபத்தில் உள்ளவர்களை விரைவாக மீட்பதற்கு முடிந்த அனைத்தையும் செய்து வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது,” என்று எக்ஸ் தளப் பதிவில் அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திலிருந்து காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட தெலுங்கானா அமைச்சர் உத்தம் ரெட்டி, சுரங்கப்பாதைக்குள் காற்றோட்டமான சூழ்நிலை உள்ளதால் சிக்கிய தொழிலாளர்களுக்கு பிராணவாயு (ஆக்ஸிஜன்) விநியோகத்தில் எந்தத் தடையும் இல்லை என்று கூறினார்.
சம்பவம் நடந்தபோது ஏறக்குறைய 60 பேர் சம்பவ இடத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தனர், சிக்கிய எட்டு பணியாளர்களைத் தவிர, அனைவரும் பாதுகாப்பாக வெளியே வந்ததாக நாகர்கர்னூலைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. மல்லு ரவி தெரிவித்ததாக ஏஎன்ஐ அறிக்கை தெரிவிக்கிறது.