புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் வசிப்போர் பிறப்புச் சான்றிதழ்களைப் பெறுவதற்கு விரைவில் வாட்ஸ்அப்பில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் சாதிச் சான்றிதழ்களுக்கும் அதன்வழி விண்ணப்பிக்க முடியும். பின்னர் வாட்ஸ்அப் மூலம் அவற்றைப் பெறவும் முடியும்.
டெல்லி அரசாங்கம் அதன் சேவைகளில் சிலவற்றை மக்கள் எளிதாகப் பெறுவதற்குரிய வழிகளைக் கண்டறிந்து வருகிறது. மக்கள் நேரடியாகச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் புதிய முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளின் ஏறக்குறைய 50 சேவைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர். ‘வாட்ஸ்அப்பின் வழி நிர்வாகம்’ எனும் திட்டத்தின்கீழ், இணையத்தில் தற்போது வழங்கப்படும் பல சேவைகள், வாட்ஸ்அப்பிற்குக் கொண்டுவரப்படும். அதற்குச் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கைகொடுக்கும். அத்தகைய சான்றிதழ்களுக்கு விண்ணப்பிப்போர், தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி சொன்னார்.
திட்டத்தைத் தகவல் தொழில்நுட்பத் துறை முன்னெடுக்கிறது. புதிய திட்டத்தை நடைமுறைப்படுத்தக் காட்சித்திரையொன்றும் உருவாக்கப்படும். விண்ணப்பதாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையிலான பரிமாற்றங்களை உடனுக்குடன் கண்காணிக்கவும் நிர்வகிக்கவும் அது உதவியாக இருக்கும்.
திட்டத்தை வடிவமைத்து உருவாக்கி நடைமுறைப்படுத்தத் தொழில்நுட்ப நிறுவனமொன்று அரசாங்கத்தின்கீழ் செயல்படும் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.