புதுடெல்லி: ஹரியானாவில் அண்மையில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியுற்றது. அதையடுத்து அக்கட்சியின் மாநிலப் பொறுப்பாளர் தீபக் பாபரியா பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகள் கூறின. இருந்தும் பாஜக வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. எனவே, காங்கிரசின் இந்தத் தோல்விக்குப் பொறுப்பேற்று, பொறுப்பாளர் பதவியில் இருந்து விலக முடிவு செய்ததாக தீபக் கூறியுள்ளார்.
ஹரியானாவில் காங்கிரசின் எதிர்பாராத தோல்விகுறித்து ஆய்வு செய்யக் கட்சியின் தலைமை அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடத்தியது. தோல்விக்கான காரணங்களைப் புரிந்துகொள்வதற்காக அனைத்து வேட்பாளர்களுடனும் பேசுவதற்கு உண்மை கண்டறியும் குழு அமைக்க அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (இவிஎம்) உள்ள முரண்பாடுகள் குறித்த புகார்களை விசாரிக்கவும் தீர்வு காணவும் குழுவை அமைத்தனர். இந்த முரண்பாடுகள் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தவேண்டும், அதுவரை அந்த இவிஎம்களைப் பாதுகாக்கவேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைக் கேட்டுக்கொண்டனர்.

