பதவி விலகிய இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி

பதவி விலகிய இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி

2 mins read
46748654-1401-4c9e-8a6d-7bc8cef3c623
பீட்டர் எல்பர்ஸ். - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

மும்பை: இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோவின் தலைமை நிர்வாக அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் தமது பதவியில் இருந்து விலகினார். அவர் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) விலகியதாக இண்டிகோ நிர்வாகம் தெரிவித்தது.

கடந்த சில மாதங்களாக இண்டிகோ விமான நிறுவனம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. குறிப்பாக, அந்நிறுவனம் இயக்கிய பல விமானங்களில் அடிக்கடி தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டது, பயணிகள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளானது.

மேலும், பல்வேறு விமானச்சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதும் பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதுவரை இல்லாத அளவுக்குச் செயல்பாட்டு இடையூறுகளை அந்நிறுவனம் எதிர்கொண்ட நிலையில், இதற்குப் பொறுப்பேற்று பீட்டர் எல்பர்ஸ் பதவி விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பொது விமானப் போக்குவரத்து அமைச்சு இண்டிகோவின் செயல்பாடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தது. அதன் முடிவில் திரு பீட்டர் பதவி விலகியுள்ளார்.

இதையடுத்து, இண்டிகோவின் மேலாண்மை இயக்குநராக உள்ள ராகுல் பாட்டியா இடைக்காலத் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இண்டிகோ நிறுவனத்தின் பெயரில் இன்டர்குளோப் நிறுவனம் விமானங்களை இயக்கி வருகிறது.

நிறுவனத்தின் கலாசாரத்தை வலுப்படுத்தவும் செயல்பாட்டுச் சிறப்பை மீட்டுருவாக்கம் செய்து சிறப்பான பராமரிப்புச் சேவையை வழங்கவும் இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக திரு ராகுல் பாட்டியா பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக இன்டர்குளோப் தலைவர் விக்ரம் சிங் மேத்தா தெரிவித்துள்ளார்.

தொழில்முறை நேர்த்தியுடனும் உறுதியுடனும் செயல்படும் வகையில் தனது பணிக்காலத்தை திரு ராகுல் பாட்டியா பயன்படுத்திக் கொள்வார் என்றும் இதன்மூலம் பயணிகளிடையே நம்பகத்தன்மையை ஏற்படுத்த அவர் முனைவார் என்றும் விக்ரம் சிங் மேத்தா கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்