போக்குவரத்துத் துறையில் நிலையான உள்கட்டமைப்புக்கு பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்

போக்குவரத்துத் துறையில் நிலையான உள்கட்டமைப்புக்கு பிரிக்ஸ் மாநாட்டில் தீர்மானம்

2 mins read
55e1d0f6-c632-4885-8d98-aebc530af498
‘பிரிக்ஸ் 2026’ மாநாடு இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்றது. - படம்: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக நாக்பூரில் நடத்தப்பட்ட பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்களின் கூட்டம் உறுப்பு நாடுகளிடையே போக்குவரத்து ஒத்துழைப்பை மேம்படுத்த இணக்கம் கண்டுள்ளது.

‘பிரிக்ஸ் 2026’ மாநாடு இந்தியாவின் தலைமைத்துவத்தின்கீழ் கடந்த வாரம் நடைபெற்றது.

பிரிக்ஸ் (BRICS) என்பது பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், இந்தோனீசியா ஆகிய பத்து வளர்ந்து வரும் நாடுகளை உள்ளடக்கிய ஓர் அனைத்துலக அரசியல், பொருளியல் கூட்டமைப்பாகும்.

பிரேசிலிடமிருந்து பிரிக்ஸ் தலைமைத்துவத்தைப் பெற்ற இந்தியா, 18வது பிரிக்ஸ் மாநாட்டை நடத்தியது.

மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய நான்கு தூண்களை இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் அடிப்படையாகக் கொண்டுள்ளது. 

பிரிக்ஸ் மாநாட்டின் ஒரு பகுதியாக, மூன்றாவது பிரிக்ஸ் போக்குவரத்து அமைச்சர்கள் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் சனிக்கிழமை (ஜூலை 11) ஒன்றுகூடினர்.

அந்த அமைச்சர்நிலைக் கூட்டத்திற்கு முன்னர் வெள்ளி, சனிக்கிழமைகளில் பிரிக்ஸ் அமைப்பின் போக்குவரத்துப் பணிக்குழுவின் மூத்த நிர்வாகிகளின் கூட்டம் நடைபெற்றது.

அந்தக் கூட்டத்தில், தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

உள்கட்டமைப்பில் சுழற்சி, நிலையான விமான எரிபொருள், போக்குவரத்தில் கரியமில வாயு நீக்கம், நகர்ப்புற போக்குவரத்து மையம், தளவாட விநியோகத் தொடர் ஒத்துழைப்பு, பிரிக்ஸ் ரயில்வே ஆராய்ச்சிக் கட்டமைப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தவதற்கான பரிந்துரைகளை அந்தத் தீர்மானம் வலியுறுத்துவதாக, பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கை குறிப்பிட்டது.

போக்குவரத்து அமைச்சர்களும் பேராளர் குழுத் தலைவர்களும் ஒருமித்த கருத்துகளுடனும் அணுகுமுறையுடனும் கூட்டு உறுதிப்பாட்டை உள்ளடக்கிய அறிவிப்பை இறுதிசெய்ய அது உதவியது.

இருதரப்பு மரியாதை, சமத்துவம், ஒருமித்த கருத்து போன்ற பிரிக்ஸ் அமைப்பின் உணர்வுகளை இத்தகைய ஆலோசனைகள் பிரதிபலித்ததாக அறிக்கை மேலும் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்