எங்கள் தாய்மொழியை மதியுங்கள்; செய்தியாளர்களைச் சாடிய ஜம்மு-காஷ்மீர் பிடிபி கட்சித் தலைவி

1 mins read
bc1a2a21-b589-4904-98e1-cb80f4d57893
உருதுமொழியில் பேசச் சொன்ன செய்தியாளரிடம், எங்கள் தாய்மொழியான காஷ்மீரி மொழியை நீங்கள் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என்று முஃப்தி சாடியுள்ளார். - படம்: இண்டியா டுடே

ஶ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில், அந்தக் கட்சித் தலைவி மெஹபூபா முஃப்தி கலந்துகொண்டார். அப்போது அவர், தமது தாய்மொழியான காஷ்மீரி மொழியில் பேசத் தொடங்கினார்.

உடனே அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் எழுந்து, உருது மொழியில் பேசுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் கடும் கோபத்திற்குள்ளான முஃப்தி, “உங்களுக்கு மொழிபெயர்ப்பு வேண்டுமா? ஏன்? நீங்கள் வேண்டுமெனில் மொழிபெயர்த்துக்கொள்ளுங்கள். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆங்கிலத்திலோ அல்லது உருதுவிலோ பேசச் சொல்லக் கேட்டிருக்கிறீர்களா?

“முதலில் தாய்மொழிக்கு மரியாதை அளிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். காஷ்மீரி மொழிக்கும் மரியாதை அளியுங்கள்,” என்று கோபத்துடன் பேசினார்.

மேலும் பத்திரிகையாளர்கள், காஷ்மீரி மொழிக்கு உரிய மரியாதையைத் தர வேண்டும் என்றும் மெகபூபா முப்தி வலியுறுத்தினார்.

அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

அந்த செய்தியாளர் கூட்டத்தில் காஷ்மீரி மொழியில் பேசிய முஃப்தி, பங்ளாதேஷில் இரண்டு இளைஞர்கள் அடித்துக் கொல்லப்பட்டது குறித்து, நாட்டில் சகிப்புத் தன்மையற்ற நிலை அதிகரித்து வருவதாகவும் வங்கதேசத்தின் நிலை மிகவும் கவலை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

ஜம்மு -காஷ்மீர் அரசு, தனது அமைச்சரவைக் குழுவை அங்கு அனுப்பி வங்கதேசத்தில் வாழும் காஷ்மீரிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்