புதுடெல்லி: இந்தியா முழுவதும் சமையல் எரிவாயுக் கலன்களின் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, சென்னை, பெங்களூரு, மும்பை எனப் பல்வேறு முக்கியமான நகரங்களில் இயங்கிவரும் சில உணவகங்கள் எந்த நேரத்திலும் மூடப்படலாம் என்று கூறப்படுகிறது.
இஸ்ரேல், அமெரிக்கப் படைகள் ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்திவரும் நிலையில், இந்தப் போரின் தாக்கம் அனைத்துலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் கணிசமாக உயர்த்தியுள்ளது.
இதன் எதிரொலியாக, இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் தங்களது உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயுக் கலன்களின் விலை ரூ.60 என்ற அளவிலும் வணிகப் பயன்பாட்டுக்கான உருளையின் விலை ரூ.115ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், எரிவாயுக் கலன்களுக்கு ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாடு காரணமாக உணவக, தங்குவிடுதிகளின் நடவடிக்கைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அத்தகைய நிலை ஏற்பட்டால் உணவகங்கள் மூடப்படும் என்றும் பெங்களூரு உணவகங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
‘ஹோட்டல்’ தொழில் ஓர் அத்தியாவசியச் சேவையாக இருப்பதால் தினசரி உணவுக்காக அவற்றை நம்பியிருக்கும் பொதுமக்கள், மாணவர்கள், விற்பனை, சேவைத்துறை வல்லுநர்கள் பாதிக்கப்படுவர் என அச்சங்கம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எரிவாயு விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பும் வரை தங்கள் துறையும் சிரமங்களை எதிர்கொள்ளும் என்று உணவக உரிமையாளர்கள் சங்கம் கூறியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எரிசக்தி நெருக்கடியால் மும்பை மாநகரம் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அங்கு 20 விழுக்காடு உணவகங்கள், தங்குவிடுதிகளைத் தற்காலிகமாக மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகளை மேற்கோள் காட்டி என்டிடிவி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அங்குள்ள உணவகங்கள் சமைப்பதற்கு அதிக நேரம் பிடிக்கும் உணவு வகைகளைக் கைவிடத் தொடங்கியுள்ளன.
முன்னதாக, எரிவாயுக் கலன் விநியோகம் குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, சென்னையிலும் சமையல் எரிவாயுக் கலன்களுக்கான தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.
முன்பு, இரு எரிவாயுக் கலன்களுக்கு இடையேயான முன்பதிவுக் காலம் 21 நாள்களாக இருந்த நிலையில், தற்போது அது 25 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலி பகுதியில் இயங்கிவரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில் வணிகப் பயன்பாடுக்கான எரிவாயுக் கலன் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் வீட்டு உபயோக எரிவாயுக் கலன் விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் திங்கட்கிழமை (மார்ச் 9) தகவல் பரவியது.
எனினும், சில எண்ணெய் நிறுவனங்கள் இந்தத் தகவல் உண்மையல்ல என்று விளக்கம் அளித்துள்ளன.
இதனிடையே, எண்ணெய் நிறுவனங்களுடன் தமிழக அரசு அவசர ஆலோசனை நடத்தி வருகிறது.
கையிருப்பிலுள்ள எரிவாயுக் கலன்களின் விவரம் குறித்து உடனடியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும் என மாநில அரசின் தலைமைச் செயலாளர் அறிவுறுத்தியுள்ளார்.

