சிகிச்சைக் கட்டுப்பாட்டால் தடுமாறும் திருநங்கைகள்

சிகிச்சைக் கட்டுப்பாட்டால் தடுமாறும் திருநங்கைகள்

1 mins read
55787a3f-00e1-4a6b-af64-ea449567e320
புதிய விதிமுறைப்படி குறிப்பிட்ட சிலரே சுரப்புநீர் சிகிச்சைகளுக்குத் தகுதிபெறுவதால் திருநங்கைகள் பலர் தங்களது வழக்கமான சிகிச்சையைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் சில மாதங்களுக்குமுன் திருநங்கைகளுக்கான சுரப்புநீர் (ஹார்மோன்) சிகிச்சை தொடர்பான விதிமுறைகளில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

புதிய விதிமுறைப்படி, குறிப்பிட்ட சிலரே சுரப்புநீர் சிகிச்சைகளுக்குத் தகுதிபெறுவர். இதனால், திருநங்கைகள் பலர் தங்களது வழக்கமான சிகிச்சையைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதிய விதிமுறை நடப்புக்கு வந்ததால் திருநங்கைகளுக்கு உதவ முடியாமல் மருத்துவர்களும் தடுமாறுகின்றனர். மேலும், சிகிச்சைக்காக வரும் திருநங்கைகளைக் கண்டு அவர்களில் சிலர் அஞ்சுகின்றனர். மருத்துவ ஊழியர்களும் பிரச்சினைகள் ஏதும் வரக்கூடாது என்பதில் கவனமாக உள்ளனர்.

புதிய விதிமுறையின்படி, திருநங்கைகள் சுரப்புநீர் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் அவர்கள் மருத்துவக் குழுவிடம் சென்றும் சான்றிதழ் பெற வேண்டும்.

அதேநேரம் எந்த மருத்துவக் குழுவிடம் சான்றிதழ் பெற வேண்டும், மத்திய அரசின்கீழ் உள்ள மருத்துவர்களிடம் சான்றிதழ் வாங்க வேண்டுமா அல்லது மாநில அரசு மருத்துவர்களிடம் பெற வேண்டுமா என்ற தெளிவான விவரங்கள் இல்லாமல் திருநங்கைகள் குழம்பியுள்ளனர்.

2026ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னர் திருநங்கைகள் சுரப்புநீர் சிகிச்சையை எளிதாக மேற்கொள்ள முடிந்தது. அதற்கு, அறுவை சிகிச்சை நிபுணர் அல்லது மனநல மருத்துவர் ஆகியோரிடம் கடிதம் வாங்கினால் மட்டும் போதுமானதாக இருந்தது.

இதனிடையே, சுரப்புநீர் சிகிச்சை தொடர்பில் இந்தியாவில் வழங்கப்படும் சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே விதிமுறைகளைக் கடுமைப்படுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்