தங்கம், வெள்ளி இறக்குமதியால் கூடியது வருவாய்; ரூ.10,463 கோடி வசூல்

தங்கம், வெள்ளி இறக்குமதியால் கூடியது வருவாய்; ரூ.10,463 கோடி வசூல்

2 mins read
b03eb982-cde8-4f04-b15e-874da40813f4
ஆறு வாரத்தில் 160 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக இந்திய நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

புதுடெல்லி: தங்கத்துக்கும் வெள்ளிக்கும் இந்திய அரசாங்கம் இறக்குமதித் தீர்வையை உயர்த்தியதன் காரணமாக சுங்க வரிமூலம் அதிக தொகை திரண்டுள்ளது.

இவ்வாண்டு மே 13ஆம் தேதிக்கும் ஆகஸ்ட் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட, ஏறக்குறைய மூன்று மாத காலத்தில் மட்டும் 10,463 கோடி ரூபாயை சுங்க வரியாக இந்திய அரசாங்கம் வசூலித்துள்ளது.

தங்க இறக்குமதிமூலம் 10,040 கோடி ரூபாயும் வெள்ளி இறக்குமதிமூலம் 328 கோடி ரூபாயும் பிளாட்டினத்தைக் கொண்டுவந்ததற்கு வரியாக 95 கோடி ரூபாயும் திரட்டப்பட்டது.

கடந்த மே 13ஆம் தேதி தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 6 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசாங்கத்திற்கான வருவாயும் அதிகரிக்கத் தொடங்கியது.

அதேபோல, பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 6.4 விழுக்காட்டிலிருந்து 15.4 விழுக்காடாக உயர்த்தப்பட்டது. தங்கம், வெள்ளி நகைகளுக்கு மட்டுமன்றி, கட்டிகளுக்கும் அந்த உலோகங்களால் செய்யப்படும் நாணயம் போன்ற பிற பொருள்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது.

இந்த நடவடிக்கை இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பிளாட்டினத்தின் விலையை அதிகரித்தது. அதேவேளை, இந்தியாவின் அந்நியச் செலாவணி மீதான அழுத்தத்தை ஓரளவு குறைக்க அந்நடவடிக்கை உதவியது.

தங்கம், வெள்ளிக்கான இறக்குமதித் தீர்வையை உயர்த்திய அதேவேளை, தங்கக் கடத்தல் முறியடிப்பு வேட்டையில் அதிகாரிகள் இறங்கினர்.

அதன் பயனாக, ஆறு வார காலத்தில் மட்டும் 160 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, அதனைக் கடத்த முயன்ற 116 பேர் கைது செய்யப்பட்டனர்.

இணை நிதி அமைச்சர் பங்கஜ் சௌத்ரி இந்த விவரங்களை திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) மக்களவையில் வெளியிட்டார்.

குறிப்புச் சொற்கள்
இறக்குமதிதங்கம்வெள்ளி