இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

இந்திய ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் நியமனம்

1 mins read
d13c0d9e-345d-4afe-a5f2-d5f100f9b989
மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா மூன்றாண்டு காலம் பணியாற்றுவார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) புதிய ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா நியமிக்கப்பட்டு உள்ளார்.

மத்திய வருவாய்த் துறை செயலாளரான திரு மல்ஹோத்ரா, ஆர்பிஐ ஆளுநராக புதன்கிழமை (டிசம்பர் 11) பதவி ஏற்பார் என்றும் மூன்றாண்டுகளுக்கு அவர் அந்தப் பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

வருவாய்த் துறை செயலாளர் பதவிக்கு முன்னதாக நிதிச் சேவைத் துறை செயலாளராக திரு மல்ஹோத்ரா இருந்தார்.

தற்போதைய ஆளுநர் சக்திகாந்த தாஸின் பதவிக்காலம் செவ்வாய்க்கிழமை முடிவடைவதைத் தொடர்ந்து புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவின் 25வது ரிசர்வ் வங்கி ஆளுநராக 2018 டிசம்பர் 12ஆம் தேதி பதவி ஏற்ற சக்திகாந்த தாஸ், ஆறாண்டு காலம் அந்தப் பொறுப்பில் இருந்தார்.

நீண்டகாலம் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராக இருந்தோரில் இரண்டாமவர் திரு தாஸ்.

பெனகல் ராமா ராவ் என்பவர் 1949 முதல் 1957 வரை ஏழாண்டுகளுக்கு மேல் மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநராகப் பணியாற்றினார்.

கான்பூர் ஐஐடியின் கணித அறிவியல் பட்டதாரியான திரு மல்ஹோத்ரா, அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொதுக்கொள்கைப் பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றவர். 33 ஆண்டுகால அரசாங்கச் சேவையின்போது மின்சாரம், நிதி, வரிவிதிப்பு, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் போன்ற துறைகளில் அவர் பணிபுரிந்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்