ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் தொடர்புடைய பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுத்தால், ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும் என ஜம்மு காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, அப்பாவி உயிர்களைப் பலி வாங்கிய இத்தாக்குதலில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்களின் ஓவியங்களை, காஷ்மீர் காவல்துறை வெளியிட்டிருந்தது.
அம்மூவரில் இருவர் பாகிஸ்தானியர்கள் என்றும் ஒருவர் காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தகவல் வெளியானது.
இதையடுத்து, இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டாலும், பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அக்குறிப்பிட்ட மூன்று பேர் இன்னும் பிடிபடவில்லை.
அம்மூவரையும் பிடிக்க பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மூன்று சந்தேக நபர்களின் படங்கள் அடங்கிய சுவரொட்டிகள், ‘பயங்கரவாதம் இல்லாத காஷ்மீர்’ என்ற வாசகத்துடன் ஜம்மு காஷ்மீர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன.
மேலும், ‘பயங்கரவாதிகள் இருப்பிடம் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் பரிசு வழங்கப்படும்’ என்றும் தகவல் அளிப்போரின் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, எல்லைப் பகுதிகளில் அமைதியான சூழ்நிலை நிலவுவதை இந்திய ராணுவம் உறுதி செய்துள்ளது.

