விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசு அதிகரிப்பு

விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசு அதிகரிப்பு

1 mins read
5fe3c63c-7cd0-4d90-8d43-15339dee4942
ரூ5,000லிருந்து ரூ.25,000க்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் விபத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்ப்பவருக்கான பரிசுத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 5,000ஆக இருந்த தொகை ரூ.25,000க்கு கூடியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரான நிதின் கட்கரி, நடிகர் அனுபம் கேர் உடன் சேர்ந்து சாலை பாதுகாப்பு குறித்து கலந்துரையாடினார்.

அப்போது பேசிய திரு கட்கரி, “சாலை விபத்தில் படுகாயமடைந்தவர்களை உடனடியாக (ஒரு மணி நேரத்துக்குள்) மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுடைய உயிரைக் காப்பற்ற முடியும். இத்தகைய பணியை செய்பவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படுகிறது. இது மிகவும் குறைவாக உள்ளதால், இந்தத் தொகையை 5 மடங்கு, ரூ.25,000க்கு உயர்த்த சாலை போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,” என்றார்.

பொதுமக்களை ஊக்குவிப்பதற்கான இந்த வெகுமதி திட்டம் அக்டோபர் 2021ல் மத்திய அரசு அறிமுகம் செய்ததாக இந்து தமிழ்திசை தகவல் தெரிவித்தது.

பணம் அல்லது வெகுமதியை எதிர்பார்க்காமல் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு முதலுதவி செய்வது, உடனடி சிகிச்சை கிடைக்க உதவி செய்வது நம் அனைவரின் கடமை என சாலை போக்குவரத்து அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்யும் உண்மையான நபர்கள் பரிசு மற்றும் சான்றிதழ் பெறுவதை உறுதி செய்வதற்காக சில நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. குறிப்பாக பல்வேறு வகையில் சரிபார்த்த பின்னரே வெகுமதி வழங்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்