ஜீப் வாகனத்தைக் காண்டாமிருகம் ஒன்று துரத்தியதில் அந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. அதிலிருந்த ஆறு இந்திய சுற்றுப்பயணிகள் உட்பட எண்மர் காயமுற்றனர்.
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம், ஜல்டாபுரா தேசிய பூங்காவில் பிப்ரவரி 25ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்தது.
கிட்டத்தட்ட 300 காண்டாமிருகங்கள், யானைகள், மான்கள், நன்னீர் ஆமைகள், பலதரப்பட்ட பறவைகளுக்கு வசிப்பிடமாக அந்தப் பூங்கா உள்ளது.
சுற்றுப்பயணிகள் அந்தக் காண்டாமிருகத்தைப் படமெடுத்துக்கொண்டு இருந்தபோது அது திடீரென திரும்பியதாக சுற்றுலா வழிகாட்டி மிதுன் பிஸ்வாஸ் கூறினார்.
அந்தக் காண்டாமிருகம் சாலையைக் கடக்கவிருந்தது தெரிந்ததாக இந்தியன் டெலிகிராஃப் செய்தித் தளத்திடம் அவர் கூறினார்.
அங்கிருந்த விலங்குகளிடம் இருந்து அந்த ஜீப் பின்னோக்கிச் செல்லத் தொடங்கியது. அப்போது அங்கிருந்த பெரிய காண்டாமிருகம் அந்த வாகனத்தை நோக்கி விரைந்தது. அந்த விலங்குடன் காண்டாமிருகக் குட்டி ஒன்றும் இருந்தது.
ஜீப்பின் கட்டுப்பாட்டை அதன் ஓட்டுநர் இழந்ததில், அந்த வாகனம் சாலையிலிருந்து விலகி தலைகுப்புறக் கவிழ்ந்தது.
இச்சம்பவத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவியது.
"வாகனம் தலைகீழாகக் கவிழ்ந்தபோது காண்டாமிருகம் இரண்டாவது முறையாக எங்களைத் தாக்காதது எங்களது அதிர்ஷ்டம். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்," என்று திரு பிஸ்வாஸ் கூறினார்.
ஜீப்பில் இருந்த எழுவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. ஆனால், பெண் சுற்றுப்பயணி ஒருவருக்குக் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
கடந்த 15 ஆண்டுகளாக அந்தப் பகுதியில் காண்டாமிருகம் தாக்கிய சம்பவம் எதுவும் நிகழவில்லை என்று தி இங்கிலிஷ் டெய்லி செய்தித் தளம் குறிப்பிட்டது.
இச்சம்பவம் குறித்து மேற்கு வங்க வனப்பகுதித் துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. சுற்றுப்பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய விதிமுறைகளைக் கடுயாக்கப்போவதாக அது கூறியது.

