கோவையில் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த காண்டாமிருகங்கள்

1 mins read
f41a2042-b8da-43a3-89e6-b33150ed301b
அண்மைய கண்டுபிடிப்பு காண்டாமிருகம் தொடர்பான தென்னிந்தியாவின் மூன்றாவது கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது. - படம்: செயற்கை நுண்ணறிவு

சென்னை: தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.

இந்தியாவில் தற்போது அசாம், மேற்கு வங்காளம் மற்றும் உத்தரப் பிரதேச மாநிலங்களில் மட்டுமே காண்டாமிருகங்கள் காணப்படுகின்றன.

இந்நிலையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், ஏறத்தாழ 3,500 ஆண்டுகளுக்கு முன்பு, கோவை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் காண்டாமிருகங்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அந்தப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளின் உடற்கூறியல் அம்சங்கள், காண்டாமிருக எலும்புகளுடன் ஒத்துப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கோயம்புத்தூருக்கு அருகிலுள்ள கற்காலத் தளமான மோலப்பாளையத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நான்கு எலும்புத் துண்டுகள், இரண்டு மெட்டாகார்பல்கள் மற்றும் ஒரு இந்திய காண்டாமிருகத்தின் இரண்டு மணிக்கட்டு எலும்புகளை அடையாளம் கண்டுள்ளனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பையம்பள்ளியில் காண்டாமிருகத்தின் எலும்புத் துண்டுகள் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டன.

இதற்கு முன்னர், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் காண்டாமிருகத்தின் துண்டு துண்டான மண்டை ஓடுகளின் புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், கோவை மாவட்டத்தின் தற்போதைய சான்றுகள், காண்டாமிருகம் தொடர்பாக தென்னிந்தியாவில் கிடைத்துள்ள மூன்றாவது கண்டுபிடிப்பாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்