அரிசி விலை உயரும் நிலை; தனக்கு மிஞ்சிதான் ஏற்றுமதி என இந்தியா தடை

அரிசி விலை உயரும் நிலை; தனக்கு மிஞ்சிதான் ஏற்றுமதி என இந்தியா தடை

2 mins read
d6ef5b5f-ee1e-452c-98ea-223f016a8371
பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசிக்கு இந்தியா தடை விதித்துள்ளது. - படம்: இந்திய ஊடகம்  

உலகின் மாபெரும் அரிசி ஏற்றுமதி நாடான இந்தியா, பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. இதனால் அனைத்துலக அளவில் அரிசி விலை மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கொவிட்-19, உக்ரேன் போர், பருவநிலைக் கோளாறுகள் போன்றவற்றால் ஏற்கெனவே அனைத்துலக அளவில் அரிசி விலை பல ஆண்டு காலம் இல்லாத அளவுக்குக் கூடி இருக்கிறது.

உலக அரிசி ஏற்றுமதியில் 40%க்கும் அதிக பங்கை இந்தியா வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா இப்போது விதித்துள்ள தடை காரணமாக அரிசி இறக்குமதியை அதிகம் நம்பி இருக்கும் நாடுகளில் பிரச்சினை ஏற்படலாம் என்று ‘ஜிரோ இன்டலிஜென்ஸ்’ என்ற பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா விதித்துள்ள தடையால் ஆப்பிரிக்க நாடுகள், துருக்கி, சிரியா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகளும் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அந்த நிறுவனம் கணித்துள்ளது.

உலகளவில் ஆண்டுக்காண்டு அடிப்படையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் பாஸ்மதி அல்லாத இந்திய வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கான தேவை 35% அதிகரித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் போதிய அளவுக்கு அரிசி இருப்பதை உறுதிப்படுத்தவும் உள்நாட்டில் அரிசி விலை உயர்வைத் தடுக்கவும் இந்தத் தடை விதிக்கப்பட்டு இருப்பதாக இந்திய அரசாங்கம் தெரிவித்தது.

இந்தியா உடைத்த அரிசி ஏற்றுமதிக்கு ஏற்கெனவே தடை விதித்து இருக்கிறது. வெள்ளை அரிசி ஏற்றுமதிக்கு செப்டம்பரில் அது 20% ஏற்றுமதி வரியையும் விதித்தது.

இந்தியா சென்ற ஆண்டில் பாஸ்மதி அல்லாத 10.3 மில்லியன் டன் வெள்ளை அரிசியை ஏற்றுமதி செய்தது.

இந்தியா ஏற்றுமதி செய்யும் அளவுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய வேறு நாடுகளிடம் இப்போது போதிய வளம் இல்லை என்று ராபோபேங்க் என்ற நிறுவனத்தின் மூத்த பகுப்பாய்வாளர் ஆஸ்கார் ஜக்ரா கூறினார்.

தாய்லாந்து, வியட்னாம், அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பொதுவாக அதிக அரிசியை ஏற்றுமதி செய்பவை. ஆனால், இந்திய ஏற்றுமதி குறைவை ஈடு செய்யும் அளவுக்கு அவற்றிடம் போதிய அரிசி இருப்பு இல்லாமல் இருக்கலாம் என்றாரவர்.

கருங்கடல் தானிய உடன்பாட்டை மாஸ்கோ ஏற்கெனவே ரத்து செய்து இருக்கிறது. இதனால், உக்ரேன் கோதுமை ஏற்றுமதி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன்விளைவாக கோதுமை விலை ஏற்கெனவே கூடி இருக்கிறது. இந்தியாவில் விலை உயர்வை தடுக்கும் நோக்கத்தில் கோதுமை, சர்க்கரை ஏற்றுமதிகளை இந்தியா சென்ற ஆண்டே கட்டுப்படுத்திவிட்டது.

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் வரைப்பட்ட ஓராண்டில் அரிசி விலை 15% வரை கூடி இருக்கிறது.

குறிப்புச் சொற்கள்