இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு

இந்தியாவில் புற்றுநோய் மருந்துகளின் விலை உயர்வு

2 mins read
44d7fc4e-edc5-4644-83e0-375c8e42f9b5
உயிர் காக்கும் மருந்துகளான சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் ஆகிய மருந்துகளுக்கு கடந்த மூன்று வாரங்களாக இந்திய மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது.  - சித்திரப்புப் படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் மருந்துகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் காரணமாக மூலப்பொருள்களின் விநியோகம் சீர்குலைந்து போனதால் அம்மருந்துகளின் விலை உயர்வுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்களை மேற்கோள் காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

உயிர் காக்கும் மருந்துகளான சிஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் ஆகிய மருந்துகளுக்கு கடந்த மூன்று வாரங்களாக இந்திய மருத்துவமனைகளில் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இவை இரண்டுமே கீமோதெரபி சிகிச்சைக்குத் தேவைப்படும் மருந்துகளாகும்.

தட்டுப்பாட்டுக்கு இடையே அவற்றின் விலை உயர்வுக்கு அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், விலை உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட இரு மருந்துகளும் விலைக் கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதுடன், தேசிய அத்தியாவசிய மருந்துகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளன.

மூலப்பொருள்களின் விலை உயர்வால் மருந்து உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதாக மருந்து நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, விலை உயர்வுக்கு கொள்கை அடிப்படையில் இந்திய அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளதாகத் தெரிகிறது.

மொத்தம் 82 மருந்துகளின் விலையை மறுபரிசீலனை செய்யுமாறு மருந்து நிறுவனங்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளன.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பெயர்பெற்ற நாட்டின் முன்னணி மருத்துவமனைகளில் உள்ள மருத்துவர்கள் பலரும் முக்கியமான மருந்துகளுக்குப் பற்றாக்குறை நிலவுவதைச் சுட்டக்காட்டியுள்ள நிலையில், இத்தகைய சூழல் நோயாளிகளுக்கு கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

“தட்டுப்பாடு நிலவும் வேளையில் மருந்துகளின் விலை உயர்த்தப்பட்டிருப்பது கவலை தருகிறது,” என்கிறார் இப்பற்றாக்குறையை முதன்முதலில் சுட்டிக்காட்டிய மருத்தவர் ஷியாம் அகர்வால்.

இவர் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையின் மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவர் ஆவார்.

ஸ்பிளாட்டின், கார்போபிளாட்டின் ஆகியவற்றை ‘கீமோதெரபியின் முதுகெலும்பு’ என்று விவரிக்கும் அவர், வாய், கருப்பை, மார்பகம், பித்தப்பை, நுரையீரல் உள்ளிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்க இந்த மருந்துகள் பெரிதும் உதவுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இந்த மருந்துகள் அதிக எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுவதையும் மலிவு விலையில் கிடைப்பதையும் இந்திய அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று மருத்துவர் ஷியாம் அகர்வால் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்