இந்தியாவில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு

இந்தியாவில் இணையக் குற்றங்கள் அதிகரிப்பு

2 mins read
e7bf31c9-526f-4b58-ae75-82649a960019
பெரும்பாலான இணையக் குற்றங்கள் மோசடி செய்யும் நோக்கத்துடனேயே இருந்தன. - மாதிரிப்படம்: பிக்சாபே

புதுடெல்லி: இந்தியாவின் கடந்த 2023ஆம் ஆண்டைவிட 2024ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தக் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்ததாக தேசிய குற்றப் பதிவகம் (என்சிஆர்பி) அறிக்கை தெரிவிக்கிறது.

அதே நேரத்தில், இணையக் குற்ற விகிதம் 17 விழுக்காடு அதிகரித்ததாக புதன்கிழமை (மே 6) வெளியிடப்பட்ட அந்த அறிக்கை கூறுகிறது.

அதாவது, 2024ஆம் ஆண்டில் 101,928 இணையக் குற்றப் புகார்கள் பதிவானதாகவும் அதற்கு முந்திய ஆண்டில் அந்த எண்ணிக்கை 86,420ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

“2024ஆம் ஆண்டில் பதிவான இணையக் குற்றங்களில் 72.6 விழுக்காடு மோசடி செய்யும் நோக்கத்துடனேயே இருந்தன; 3.1 விழுக்காடு பாலியல் சுரண்டல் தொடர்பானவை; 2.5 விழுக்காடு துன்புறுத்தல் தொடர்பானவை,” என்று அவ்வறிக்கை குறிப்பிட்டது.

ஒட்டுமொத்தத்தில், 2024ஆம் ஆண்டில் 5.886 மில்லியன் குற்றங்களை என்சிஆர்பி பதிவுசெய்தது. இது அதற்கு முந்திய ஆண்டைவிட ஆறு விழுக்காடு குறைவு.

2023ல் அரசாங்கத்திற்கு எதிரான 4,873 குற்றச் செயல்கள் பதிவான நிலையில், 2024ல் அந்த எண்ணிக்கை 5,194ஆகக் கூடியது. அவற்றுள் 4,395 புகார்கள் பொதுச் சொத்துச் சேதத் தடுப்புச் சட்டத்தின்கீழும் 649 புகார்கள் சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின்கீழும் பதிவுசெய்யப்பட்டன.

பெங்களூரில் அதிகம்

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் தலைநகராகக் கருதப்படும் பெங்களூரு நகரில் மட்டும் 2024ல் 17,561 இணையக் குற்றங்கள் பதிவாயின.

மாநகரங்களைப் பொறுத்தமட்டில், மும்பை (4,939), ஹைதராபாத் (4,009), சென்னை (1,992) ஆகியவை அடுத்தடுத்த நிலைகளைப் பிடித்தன. ஒட்டுமொத்தத்தில், மாநகரங்களில் 34,958 இணையக் குற்றங்கள் பதிவாயின.

பட்டியலினத்தவர்க்கு எதிரான குற்றச் செயல்கள்

இதனிடையே, 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் 2024ஆம் ஆண்டில் பட்டியலினத்தவர்க்கு எதிரான குற்றச் செயல்கள் குறைந்தன. 2024ல் தாழ்த்தப்பட்டோர்க்கு எதிராக 57,789 குற்றச் செயல்கள் பதிவாயின. இது 2023ஆம் ஆண்டைவிட 3.6 விழுக்காடு குறைவு. அதுபோல, பழங்குடியினர்க்கு எதிரான குற்றச் செயல்களின் எண்ணிக்கையும் 23.1 விழுக்காடு குறைந்து 9,966ஆகப் பதிவானது.

குறிப்புச் சொற்கள்