இந்தியா-பாகிஸ்தான் இடையே நீடிக்கும் அணு ஆயுத மோதல் ஆபத்து: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இந்தியா-பாகிஸ்தான் இடையே நீடிக்கும் அணு ஆயுத மோதல் ஆபத்து: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

2 mins read
02fc8a19-a4bc-4a34-a9bc-f9f7840ddc73
இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி மோதலை விரும்பாவிட்டாலும் அணு ஆயுத மோதலுக்கான ஆபத்து நீடித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது. - சித்திரிப்புப்படம்: நைஸ் நேப்பால்

புதுடெல்லி: இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

கடந்த காலத்தில் இருதரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட பதற்றம் மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், அணு ஆயுத மோதல் நிகழும் என்று உளவுத்துறை தனது அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க செனட் சபையில் தாக்கல் செய்யப்பட்ட அந்நாட்டு உளவுத்துறையின் 34 பக்க அறிக்கையில், தற்போதுள்ள சூழலில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலைத் தொடங்க விரும்பவில்லை என்றும் பயங்கரவாத சக்திகள் தொடர்ந்து நெருக்கடிகளுக்கான காரணிகளை உருவாக்கும் வாய்ப்பு உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க உளவுத்துறை ஆண்டுதோறும் அனைத்துலக பாதுகாப்பு நிலவரங்கள் குறித்து தனது மதிப்பீட்டறிக்கையைத் தயாரிப்பது வழக்கம். அதன்படி, இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடி மோதலை விரும்பாவிட்டாலும் அணு ஆயுத மோதலுக்கான ஆபத்து நீடித்து வருவதாக அறிக்கை தெரிவிக்கிறது.

“கடந்த 2025ல் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் அருகே நடந்த தாக்குதல் மூலம் பயங்கரவாத மோதலைத் தூண்டிவிடுவதால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை அறிய முடிந்தது,” என்று உளவுத்துறை அறிக்கை கூறுகிறது.

அமெரிக்க அதிபர் மேற்கொண்ட அண்மைய சில நடவடிக்கைகள் அணுசக்தி பதற்றங்களைத் தணித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அமெரிக்க உளவுத்துறை, பாகிஸ்தானின் ஏவுகணைத் திறன்கள் மேம்பட்டு வருவது குறித்து தமது கவலையை வெளிப்படுத்தி உள்ளது.

தெற்காசியாவிற்கு அப்பாலும் தாக்குதல் திறன்களை விரிவுபடுத்தக்கூடிய, அதிநவீன ஆயுத அமைப்புகளை பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது என்றும் அவற்றில் அமெரிக்காவுக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளும் அடங்குவதாக உளவுத்துறையின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பாகிஸ்தானுக்கும் தலிபான்களுக்கும் இடையே அவ்வப்போது நிகழும் எல்லை தாண்டிய மோதல்கள், ஆப்கானிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாதக் குழுக்கள் தொடர்பில் அதிகரித்து வரும் பதற்றங்கள் காரணமாக, அந்த வட்டாரத்தில் உறவுகள் சீர்குலைந்திருப்பதாக அமெரிக்கா மேலும் கவலை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்