புதுடெல்லி: கடந்த 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நேர்ந்த சாலை விபத்துகளில் 172,890 பேர் உயிரிழந்தனர்.
வாகனம் ஓட்டியபோது தலைக்கவசம், இருக்கைவார் அணியாததும் போதையில் வாகனம் ஓட்டியதுமே அவர்களில் 40 விழுக்காட்டினர்க்கும் மேற்பட்டோர் விபத்தில் சிக்க காரணம் என்று சாலை விபத்துகள் குறித்த இந்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறையின் ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.
2023ஆம் ஆண்டு மோட்டார்சைக்கிளில் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி மாண்ட 54,568 பேர் தலைக்கவசம் அணியவில்லை என அவ்வறிக்கை கூறுகிறது. அவர்களில் 39,160 பேர் மோட்டார்சைக்கிளோட்டிகள்; 15,408 பேர் உடன் சென்றோர்.
அதுபோல, இருக்கைவார் அணியாமல் சென்று, விபத்தில் சிக்கி 16,025 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 8,441 பேர் வாகன ஓட்டுநர்கள்; 7,584 பேர் பயணிகள்.
போதையில் வாகனம் ஓட்டியபோது நேர்ந்த சாலை விபத்துகளில் சிக்கி 3,674 பேர் இறந்துபோயினர்; 7,523 பேர் காயமுற்றனர். முந்திய 2022ஆம் ஆண்டில் இவ்வகையில் 4,201 பேர் உயிரிழந்ததாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதனிடையே, வேகமாக வாகனம் ஓட்டுவதும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 2023ஆம் ஆண்டில் நேர்ந்த 68.4% சாலை விபத்துகளுக்கும், அதனால் ஏற்பட்ட 68.1% மரணங்களுக்கும், 69.2% காயங்களுக்கும் வேகமாக வாகனம் ஓட்டியதே காரணம்.
செல்லத்தக்க உரிமமின்றி வாகனம் ஓட்டியது 10.3% விபத்துகளுக்குக் காரணமாக அமைந்தது.
சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் காயமடைவதும் அதிகரித்திருப்பது, அமைப்புசார் செயல்முறைகள் மேம்படுத்தப்பட வேண்டிய தேவையையும் சுட்டிக்காட்டுவதாகத் திட்ட இயக்குநர் பரிசர் ரஞ்சித் கட்கில் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
“நடையர்களும் மோட்டார்சைக்கிளில் செல்வோருமே அதிக அளவில் சாலை விபத்துகளில் சிக்கி இறக்கின்றனர். மோட்டார்சைக்கிள் ஓட்டுவோரும் உடன் அமர்ந்துசெல்வோரும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கு அரசியல் ஆதரவும் வேண்டும்,” என்று திரு கட்கில் கூறினார்.
கடந்த 2023ஆம் ஆண்டில் 35,000க்கும் மேற்பட்ட நடையர்கள் சாலை விபத்துகளில் மாண்டுபோயினர் என்றும் அது 2022ஆம் ஆண்டைவிட அதிகம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வரும் 2030ஆம் ஆண்டிற்குள் சாலை விபத்து உயிரிழப்பு, காயமுறுதலைப் பாதியாகக் குறைக்க வேண்டும் எனும் இலக்கை எட்ட வேண்டுமெனில், தேசிய சாலைப் பாதுகாப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டியது அவசியம் என்றும் திரு கட்கில் வலியுறுத்தியுள்ளார்.