இமயமலையில் 16,000 அடி உயரத்தில் சாலை

1 mins read
24746529-53a1-4277-ad59-f986239b44dc
உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த 16,000 அடி உயரத்தில் உள்ள முலிங் லா மலைப்பகுதிக்குச் செல்ல 32 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சாலை அமைக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. - கோப்புப்படம்: மோன்டேக்ஸ்

டேராடூன்: சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத் எல்லை வரை செல்லும் நீலாபானி - முலிங் லா இடையே, 16,000 அடி உயரத்தில், 32 கிலோ மீட்டர் தூரத்திற்கு ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த மலைச்சாலை அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு துவங்கி உள்ளது. முலிங் லா மலைப்பகுதி உத்தராகண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ளது.

தற்போது சாலை வசதியில்லாத இந்த இடம் இமயமலையில் 16,000 அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ளது. இப்போது நீலாபானியில் இருந்து மலையேற்றத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. மலையேறிகள் தரையிலிருந்து முலிங் லாவை அடைவதற்கு ஐந்து நாள்கள் ஆகும்.

இந்நிலையில், நீலாபானி - முலிங் லா ஆகிய பகுதிகளுக்கு இடையே, 32 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணியை, ‘பி.ஆர்.ஓ.,’ (B.R.O) எனப்படும் எல்லை சாலை நிறுவனம் மூலம் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, 104 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய உள்ளனர்.

இந்த மலைப்பாதை தயாரானவுடன் சீன எல்லையில் பதற்றமான சூழல் நிலவும்போது, இந்திய ராணுவம், படைகளை சில மணிநேரங்களில் அப்பகுதிக்குக் கொண்டு செல்ல முடியும்.

கடந்த 2020ல் லடாக்கில் சீனப் படைகளுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எல்லைகளில் சாலை, பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புப் பணிகளை மத்திய அரசு விரைவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக நீலாபானி - முலிங் லா இடையே உயர்மட்ட மலைப்பாதை அமைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்