தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் சாலை விதிகளைக் கடுமையாக்க பாதுகாப்பு வலையமைப்பு வலியுறுத்து

2 mins read
83fded62-1df7-4a79-9aeb-463d309012ff
நாட்டில் பதிவாகும் 1.19 லட்சம் சாலை விபத்து இறப்புகளில், ஏறக்குறைய 72% சம்பவங்களுக்கு அதிக வேகம்தான் காரணம். - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்கும் விதமாக, நாட்டில் சாலைப் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும் என சாலைப் பாதுகாப்பு வலையமைப்பு (ஆர்எஸ்என்) வலியுறுத்தி உள்ளது.

இதையடுத்து, நல்ல செயல்திட்டங்களும் கடுமையான, தண்டனைச் சட்டங்களும் தேவை என்றும் அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே, இது தொடர்பாக அவசர சீர்திருத்த நிலை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்தியாவில் வாகனங்களின் வேகம்தான் பெரும்பாலான விபத்துகளுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.

நாட்டில் பதிவாகும் 1.19 லட்சம் சாலை விபத்து இறப்புகளில், ஏறக்குறைய 72% சம்பவங்களுக்கு அதிக வேகம்தான் காரணம்.

“மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவின்படி, அமலில் உள்ள வரம்புகளைப் பலர் மீறுகின்றனர். இவ்விஷயத்தில் தேசிய அளவில் முன்மாதிரி மாநிலமாக மேற்கு வங்கத்தைக் கருதலாம்,” என்கிறார் சாலைப் பாதுகாப்பு வலையமைப்புடன் இணைந்து செயல்படும் ஐஐடி பேராசிரியர் பார்கப் மைத்ரா.

இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளில், ஆண்டுதோறும் 1.68 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இந்த இறப்புகளில் 10% சிறார்களுடன் தொடர்புடையவை.

கடந்த 2011 முதல் 2022ஆம் ஆண்டு வரை, நாடு முழுவதும் 1.98 லட்சம் குழந்தை இறப்புகள் பதிவாகியுள்ளன. எனவே, சாலைப் பாதுகாப்பை வழக்கமான அம்சமாகக் கருதாமல், தீவிர நடவடிக்கைகளை இந்திய நாடாளுமன்றம் மேற்கொள்ள வேண்டும் என சாலை பாதுகாப்பு வலையமைப்பு வலியுறுத்தி உள்ளது.

குறிப்புச் சொற்கள்