சிவபுரி: மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி என்ற பகுதியில் வசதியான வாழ்கைமுறை குறித்து காணொளியில் காட்டிய புகழ்பெற்ற சமூக ஊடகப் பதிவாளர் ரச்னா குர்ஜார் என்ற மாது, அவரது பதிவுகளில் அடிக்கடி பலவித தங்க ஆபரணங்களுடன் காணப்பட்டார்.
அதனைச் சாதகமாகப் பயன்படுத்தி சனிக்கிழமை (ஜூன் 6) இரவு கொள்ளையர்கள் அவரது இல்லத்துக்குள் புகுந்தனர். குடும்பத்தினருடன் அம்மாது அறையில் உறங்கிக்கொண்டிருந்தார்.
அனைவரையும் அந்த அறையிலேயே வைத்துப் பூட்டிவிட்டு, மொத்தம் $13,500 (இந்திய ரூபாய் 8 முதல் 10 லட்சம்) மதிப்புள்ள தங்கம், வெள்ளி, ரொக்கம் என கொள்ளையர்கள் திருடிச் சென்றுவிட்டனர்.
அது போதாது என்று ஒரு பெட்டி நிறைய வைக்கப்பட்டிருந்த ஊட்டச் சத்து குடிபானத்தையும் அவர்கள் எடுத்துச் சென்றனர்.
அனைவரும் ஒரே அறையில் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை 2 மணியளவில் திருடர்கள் வீட்டில் புகுந்ததாக திருவாட்டி குர்ஜார் கூறினார். அதிகாலை 4மணியளவில் தூக்கம் கலைந்து குடும்பத்தில் ஒருவர் விழித்தெழுந்தபோது அறையின் கதவு வெளியில் பூட்டப்பட்டிருந்தது தெரியவந்தது.
உறவினர்களை அழைத்தபிறகு அவர்கள் அங்கு விரைந்துவந்து அறையின் கதவுகள் திறக்கப்பட்டன.
கண்காணிப்புக் கேமரா
முகங்கள் அடையாளம் காணப்படாத வகையில் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை கொள்ளையர்கள் திசைதிருப்பிவிட்டதையும் மாது குறிப்பிட்டார்.
கொள்ளைச் சம்பவம் குறித்து நர்வார் காவல்நிலையத்தில் மாது புகார் அளித்தார்.

