கோல்கத்தா: இந்தியா, ஜனவரி 26ஆம் தேதி, அதன் 76வது குடியரசு தினத்தைக் கொண்டாடுகிறது.
அதை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கோல்கத்தாவில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் இந்திய ராணுவத்தின் ‘சஞ்சய்’ என்றழைக்கப்படும் இயந்திர நாய்கள் அணிவகுத்துச் சென்ற அங்கம் பலரையும் கவர்ந்தது.
இந்த ‘ரோபோ’ நாய்கள் எல்லாவித வானிலையிலும் செயல்படக்கூடியவை. படியேறுதல், செங்குத்தான மலைப்பகுதியில் ஏறுதல், தடைகளைக் கடந்து செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் இவை ஈடுபடுத்தப்படும்.
பாதுகாப்பு நடவடிக்கைகள், ரசாயன-உயிரியல்-அணுவாயுதப் போர்ச் சூழல்களில் பயன்படும் விதமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் கூறுகிறது.
இவை 15 கிலோகிராம் எடையைத் தூக்கிச்செல்ல வல்லவை. வெப்பநிலை 55 டிகிரி செல்சியசுக்கும் உறைநிலைக்குக்கீழ் 40 டிகிரி செல்சியசுக்கும் (minus 40) இடைப்பட்டிருக்கும் சூழல்களில் இவற்றை இயக்க முடியும்.
இதுவரை இத்தகைய 100 ‘ரோபோ’ நாய்கள் இந்திய ராணுவத்தின் பல்வேறு பிரிவுகளில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்க மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் இந்திய தேசியக் கொடியை ஏற்றியபின் நடைபெற்ற அணிவகுப்பில் இந்தியாவின் முப்படையினர், மேற்கு வங்கக் காவல்துறையினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநில முதல்வர் மமதா பானர்ஜி குடியரசு தின நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

