புதுடெல்லி: இந்தியா, ரோஹிங்யா அகதிகளை ஒன்றுதிரட்டி அவர்களை நாடுகடத்தியதாகத் தகவல் வந்துள்ளது.
அதிலும் ரோஹிங்யா அகதிகள் சிலர், அவர்கள் உயிருக்கு பயந்து தப்பியோடிவந்த மியன்மாருக்கு அருகே உள்ள அந்தமான் கடற்பகுதியில் விடப்பட்டதாக நம்பப்படுகிறது.
இதுகுறித்து நம்பகமான தகவல்கள் வெளிவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அத்தகவல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு ஐக்கிய நாட்டுச் சபை உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பகுதியில் அண்மையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியா முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அதன் அங்கமாக ரோஹிங்யா அகதிகள் இவ்வாறு நாடுகடத்தப்பட்டதாக நம்பப்படுகிறது.
“ரோஹிங்யா அகதிகள், கடற்படைக் கப்பல்களிலிருந்து கடலுக்குள் எறியப்பட்டிருக்கக்கூடும் என்பது அதிர்ச்சி தருகிறது,” என்றார் மியன்மாரில் மனித உரிமை விவகாரங்களுக்கான ஐக்கிய நாட்டுச் சபையின் சிறப்புத் தூதர் டாம் ஆண்ட்ரூஸ்.
“இதுகுறித்து கூடுதல் தகவல்களையும் வாக்குமூலங்களையும் பெற நான் முயற்சி செய்துவருகிறேன். நடந்தது என்ன என்பதைத் தெளிவாக விளக்குமாறு நான் இந்திய அரசாங்கத்திடம் உடனடியாகக் கேட்டுக்கொள்கிறேன்,” என்றும் அவர் சொன்னார்.
மனிதாபிமானமின்றி உயிருக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் ரோஹிங்யா அகதிகளை நடத்தவேண்டாம் என்றும் அவர் இந்திய அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார். நிலவரம் கொடூரமாக இருக்கும் மியன்மாரில் அவர்களை மீண்டும் விட்டுச் செல்வதும் அதுபோன்ற நடவடிக்கைகளில் அடங்கும் என்று திரு டாம் ஆண்ட்ரூஸ் சுட்டினார்.
இதுகுறித்து கேட்கப்பட்டதற்கு இந்திய அரசாங்கம் உடனடியாகப் பதிலளிக்கவில்லை.
தொடர்புடைய செய்திகள்
26 பேரைப் பலிவாங்கிய பஹல்காம் தாக்குதல் பாகிஸ்தானின் ஆதரவுடன் நடத்தப்பட்டதாக இந்தியா குற்றஞ்சாட்டியது. அதையடுத்து இருநாட்டு உறவு மேலும் மோசமடைந்தது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களைத் தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்துவருகிறது.
அந்த வகையில், தடுத்து வைக்கப்பட்டோரில் பலர் இந்திய குடிமக்கள் என்பது தெரிந்தவுடன் விடுவிக்கப்பட்டனர். மற்றவர்களில் ரோஹிங்யா அகதிகள், பங்ளாதேஷியர்கள் என அடையாளம் காணப்பட்டவர்கள் அதிக அளவில் நாடுகடத்தப்பட்டனர்.
அவர்களில் சிலரிடம் அகதிகளுக்கான அதிகாரபூர்வ ஆவணங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.