தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவின் பணக்கார முதல்வர் இவர்தான்!

2 mins read
1d0bbf85-a5d0-4084-8577-b40840a1c675
ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடுவின் சொத்து மதிப்பு ரூ.931 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவிலுள்ள மாநில முதல்வர்களின் சொத்து மதிப்பு குறித்த அறிக்கையை ஜனநாயகச் சீர்திருத்தச் சங்கம் (ADR) வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆந்திர முதல்வர் என். சந்திரபாபு நாயுடு இந்தியாவின் ஆகப் பணக்கார முதல்வராகத் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு ரூ.931 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாறாக, வெறும் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளையே கொண்டுள்ள மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிதான் இந்தியாவின் ஆக ஏழை முதல்வர்.

மாநில, ஒன்றிய ஆட்சிப் பகுதிகளினுடைய முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.52.59 கோடி என்றும் 31 முதல்வர்களின் ஒட்டுமொத்தச் சொத்து மதிப்பு ரூ.1,630 கோடி என்றும் அவ்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.

2023-24 நிதியாண்டில் இந்தியக் குடிமகன் ஒருவரின் சராசரி நிகர தேசிய வருமானம் ரூ.185,184ஆக இருந்தது. அதே நேரத்தில், மாநில முதல்வரின் சராசரி வருமானம் ரூ.1,364,310.

அதாவது, இந்தியக் குடிமகன் ஒருவரின் சராசரி வருமானத்தைப் போல 7.3 மடங்கை மாநில முதல்வர்கள் ஈட்டினர்.

அருணாசலப் பிரதேச மாநில முதல்வர் பேமா காண்டு ரூ.332 கோடி சொத்துகளுடன் ஆகப் பணக்கார முதல்வர்களில் இரண்டாம் நிலையில் உள்ளார். ரூ.51 கோடி மதிப்பிலான சொத்துகளைக் கொண்டுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா அப்பட்டியலில் மூன்றாமிடத்தில் இருக்கிறார்.

ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா (ரூ.55 லட்சம்), கேரள முதல்வர் பினராயி விஜயன் (ரூ.1.18 கோடி) இருவரும் முறையே பட்டியலின் கடைசியிலிருந்து இரண்டாம், மூன்றாம் நிலைகளில் உள்ளனர்.

கடனைப் பொறுத்தமட்டில், அருணாசல முதல்வர் பேமா காண்டிற்குத்தான் அதிகக் கடன் உள்ளது. அவருக்கான கடன் பொறுப்புகள் ரூ.180 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்தராமையா ரூ.23 கோடியும் சந்திரபாபு நாயுடு கிட்டத்தட்ட ரூ.10 கோடியும் கடனாகக் கொண்டுள்ளதாக ஏடிஆர் அறிக்கை கூறுகிறது.

தங்கள்மீது குற்றவியல் வழக்குகள் இருப்பதாக 13 முதல்வர்களும் கடுமையான குற்ற வழக்குகள் இருப்பதாகப் பத்து முதல்வர்களும் தெரிவித்துள்ளனர். அவை கொலை முயற்சி, கடத்தல், லஞ்சம், மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகள்.

அந்த 31 முதல்வர்களில் மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அதிஷி என இருவர் மட்டுமே பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்