இந்திய பகுதி மின்கடத்தி திட்டத்துக்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு

இந்திய பகுதி மின்கடத்தி திட்டத்துக்கு ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கீடு

2 mins read
460bd38e-37c1-462b-8bbf-8ef508aa7921
குஜராத் மாநிலம் சனந் பகுதியில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் பகுதி மின்கடத்தி ஆலையை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) திறந்து வைத்தார். - படம்: பிசினஸ் ஸ்டாண்டர்ட்

புதுடெல்லி: பகுதி மின்கடத்தி இயக்கம் 2.0 (ஐஎஸ்எம்) திட்டத்திற்காக இந்திய நிதி அமைச்சு ரூ.1.25 லட்சம் கோடி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டம் குறித்து இந்திய அமைச்சரவை விரைவில் பரிசீலிக்கும் எனத் தெரிகிறது.

‘சில்லு’ வடிவமைப்பு, உற்பத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான பகுதி மின்கடத்தி இயக்கத்தை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.

உள்நாட்டில் பகுதி மின்கடத்திக்கான சூழலை உருவாக்குவதே அரசின் நோக்கம் என்று இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மேலும், பகுதி மின்கடத்தி விநியோகச் சங்கிலித் தொடரில் இந்தியாவின் பங்களிப்பையும் அதன் திறன்களையும் அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டும் இந்த ‘2.0’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சனந் பகுதியில் மைக்ரான் டெக்னாலஜி நிறுவனத்தின் பகுதி மின்கடத்தி ஆலையை பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஜூன் 30) திறந்து வைத்தார்.

முன்பு முதன்மையாக மென்பொருள்களுக்காக இந்தியா அறியப்பட்டது என்றும் தற்போது வன்பொருள், உலகளாவிய மதிப்பு சங்கிலிக்கான உலகிற்குள் இந்தியா அடியெடுத்து வைத்துள்ளது என்றும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

தொழில்நுட்பத் தலைமை பொறுப்பிற்கான இந்தியாவின் அர்ப்பணிப்பிற்கு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நல்ல சான்றாக விளங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மனிதகுலத்திற்கான உலகளாவிய விநியோகத் தொடரைப் பாதுகாப்பதில், குறிப்பாக சில்லுகள், செயற்கை நுண்ணறிவு போன்ற முக்கியத் துறைகளில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முக்கியக் கூட்டாண்மையின் சான்றுதான் இந்த நிகழ்வு என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே, பகுதி மின்கடத்தி 2.0 திட்டத்தின்கீழ், நாடு முழுவதும் 10 முக்கியமான திட்டங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் நாடு தழுவிய அளவில் ஒரு சூழலமைப்பு உருவாகி வருவதாக பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘பகுதி மின்கடத்தி 2.0’ திட்டத்திற்கு இந்திய அரசு ரூ.76,000 கோடி நிதி ஒதுக்கி இருந்தது.

அதில் இந்தியாவில் பகுதி மின் கடத்தி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க ரூ.65, 000 கோடியும் சில்லு வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகையாக வழங்க ரூ.1,000 கோடியும் ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், 2.0 திட்டத்திற்காக ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்க செலவினங்களுக்கான நிதிக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்