திருவனந்தபுரம்: பரிசுச்சீட்டுக் குலுக்கலில் ஒரு கோடி ரூபாய் பரிசாக விழுந்ததால் தனக்கு இனி நல்ல காலந்தான் என எண்ணியிருந்தார் இந்தியாவின் கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாலையோர வணிகரான சுகுமாரியம்மா.
ஆனால், அந்தப் பரிசுச்சீட்டை விற்ற கண்ணன் என்ற முகவர், அவரிடம் பொய் சொல்லி, பரிசுக்கான சீட்டைப் பெற்றுச் சென்றுவிட்டார்.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுகுமாரியம்மா, நியாயம் கோரி நீதிமன்றத்தை நாடினார்.
இவ்வழக்கில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 15) நீதிமன்றம் சுகுமாரியம்மாவிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
சென்ற மே மாதம் 15ஆம் தேதி நடந்த 50-50 பரிசுச்சீட்டுக் குலுக்கலில் அவருக்கு ரூ.1 கோடி பரிசு விழுந்தது. 30 நாள்களுக்குள் அதனை வங்கியில் ஒப்படைத்தால் மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும்.
அவ்வகையில், ஜூன் 15ஆம் தேதிதான் கடைசி நாள் என்ற நிலையில், அன்று தனது கைக்குப் பரிசுச்சீட்டு கிடைத்ததும் சுகுமாரியம்மா உடனடியாக அதனை வங்கியில் ஒப்படைத்தார்.
தரகு போக அவருக்கு ரூ.63 லட்சம் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. வழக்கில் சுமுகத் தீர்வு எட்டப்பட்டதால் பரிசுச்சீட்டை விற்ற கண்ணனுக்கும் உரிய பங்கு கிடைக்கும் என்று சுகுமாரியம்மாவின் வழக்கறிஞர் ஜி எஸ் சதீஷன் நாயர் கூறினார்.
மேலும், கண்ணன்மீது காவல்துறையில் அளித்திருந்த புகார்களையும் மீட்டுக்கொள்ள சுகுமாரியம்மா இணங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

