திருப்பதி: ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், குடிவாடாவில் புகழ்பெற்ற ஸ்ரீ கல்யாண வெங்கடேசப் பெருமாள் கோயில் உள்ளது. அது இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் செயல்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில், மாட்டூரி சுப்பாராவ் எனும் பக்தர், 461 கிராம் எடையில், வைர கிரீடத்தை சுவாமிக்கு காணிக்கை வழங்கினார். இதன் தற்போதைய மதிப்பு ரூ.1 கோடி எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சில நாள்களுக்குமுன் கோயிலுக்குச் சென்ற மாட்டூரி சுப்பாராவ், சுவாமிக்கு வைர கிரீடத்தைச் சூட்டி அழகு பார்க்க வேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால், அது வங்கிப் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளது எனக் கோயில் நிர்வாகம் கூறியது.
ஒவ்வொரு முறையும் இதே பதிலைச் சொன்னதால் சந்தேகம் அடைந்த சுப்பாராவ் இந்து சமய அறநிலையத் துறையில் முறையிட்டார்.
இதையடுத்து, வியாழக்கிழமை (மே 21) உதவி ஆய்வாளர் லலிதா கோயிலில் விசாரணை நடத்தினார். அப்போது, அறங்காவலர் குழுவில் இடம்பெற்றுள்ள 31 பேரும் ஊரில் இல்லை எனத் தெரிவித்தனர்.
எனவே, நன்கொடையாளரிடம் வைரக் கிரீடம் குறித்து தகவல்களைச் சேகரித்தார். தற்போது அந்தக் கிரீடம், கோயில் பணிகளுக்காக ஓர் அடகுக் கடையில் அடகு வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதனால், அந்த அடகுக் கடைக்காரருக்கும் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டுமென அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

