இம்பால்: வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாமிலும் மணிப்பூரிலும் சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடிச் சோதனைகளில் 48 மணி நேரத்தில் ரூ.100 கோடி (S$15.2 மில்லியன்) மதிப்புள்ள போதைப்பொருள்கள் சிக்கின.
அவற்றின் தொடர்பில் ஒன்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரின் சுரச்சந்த்பூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் சுங்க, வருவாய்ப் புலனாய்வுத்துறை அதிகாரிகளும் இரு மாநிலக் காவல்துறையினரும் இணைந்து ‘வெண்திரை நடவடிக்கை’ எனப் பெயரிடப்பட்ட சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாக மணிப்பூர் உள்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“அந்தக் கூட்டு நடவடிக்கையில் ரூ.54.29 கோடி மதிப்புடைய 7.75 கிலோ ஹெராயினும் ரூ.87.57 லட்சம் மதிப்புடைய 6.74 கிலோ ஓப்பியமும் சிக்கின. அத்துடன், ரூ.35.63 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது,” என்று அவர் விளக்கினார்.
மியன்மாரிலிருந்து அவை கடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மிசோரம், மியன்மார் எல்லைகளை ஒட்டி அமைந்துள்ள சுரச்சந்த்பூர் மாவட்டத்தில் இதற்கு முன்னரும் பலமுறை அதிக அளவில் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, அசாமின் கச்சார் மாவட்டத்தில் ரூ.45 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பிடிபட்டது. அதன் தொடர்பில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல்காரர்களைப் பிடித்த காவல்துறையினருக்கு மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா பாராட்டு தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதுகுறித்து எக்ஸ் ஊடகத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “போதைப்பொருளுக்கு எதிரான இரு வெவ்வேறு நடவடிக்கைகளில் கச்சார் மாவட்டக் காவல்துறையினர் ரூ.45 கோடி மதிப்புள்ள 150,000 போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளனர்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.