அன்னையர் தினத்தைக் கொண்டாட ரூ.10,000 ஊக்கத்தொகை, மூன்று நாள் விடுப்பு

டெல்லி நிறுவனத்தின் நெகிழ்ச்சியான முன்னெடுப்பு

அன்னையர் தினத்தைக் கொண்டாட ரூ.10,000 ஊக்கத்தொகை, மூன்று நாள் விடுப்பு

படங்கள்: இன்ஸ்டகிராம்/ரஜத் குரோவர்

09 May 2026 - 6:28 pm

2 mins read

புதுடெல்லி: அன்னையர் தினத்தை முன்னிட்டு, தம் ஊழியர்கள் தங்கள் பெற்றோருடன் சுற்றுலா செல்ல ₹10,000 ஊக்கத்தொகையும், மூன்று நாள்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் அறிவித்து புதுடெல்லியைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புதுடெல்லியைத் தளமாகக் கொண்ட ‘எலீட் மார்க்’ (Elite Marque) எனும் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் நிறுவனரான ரஜத் குரோவர், தம் ஊழியர்களுக்காக இந்தத் தனித்துவமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அந்த மூன்று நாள் விடுமுறை, ஊழியர்களின் வழக்கமான விடுப்புக் கணக்கிலிருந்து கழிக்கப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ள ரஜத், “நம் வாழ்நாள் முழுவதும் நமக்காக ‘சரி’ என்று சொல்லி உழைத்தவர்களிடம், நாம் எப்போதும் ‘ஒரு நாள் பார்த்துக்கொள்ளலாம்’ என்று தள்ளிப்போடுகிறோம். பெற்றோர்கள் தங்கள் கனவுகளையும் காலத்தையும் நமக்காக அர்ப்பணித்தவர்கள். அவர்களிடம் அவர்களுக்கு என்ன பிடிக்கும் எனக் கேட்டு, அவற்றை இப்போதே நிறைவேற்றுங்கள்,” என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

அந்நிறுவனம் முன்னெடுத்துள்ள ‘கேட்டீர்களா?’ எனும் விழிப்புணர்வு இயக்கத்தின் ஒரு பகுதியாக இது தொடங்கப்பட்டுள்ளது.

“பரபரப்பான வேலைகளுக்கு இடையே நாம் கேட்க மறந்துபோன ஒரு கேள்வியை (‘உங்களுக்கு எங்கே செல்ல வேண்டும்?’) இப்போது உங்கள் பெற்றோரிடம் கேளுங்கள்,” என்பதே இதன் நோக்கம்.

முன்னதாக, தீபாவளிக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை அளித்து கவனம் ஈர்த்த திரு ரஜத்தின் இந்தப் புதிய முன்னெடுப்பு, தற்போதைய பெருநிறுவன உலகில் ஊழியர்களின் மனநலத்திற்கும் குடும்ப உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகப் பார்க்கப்படுகிறது.

திரு ரஜத்தின் இந்த ‘மனிதநேயமிக்க’ தலைமைப் பண்பைச் சமூக ஊடகவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

View post on Instagram
 
குறிப்புச் சொற்கள்