ரயில் பயணப் பெட்டிகளில் ரூ.104 கோடி தலையணை, போர்வை திருட்டு

ரயில் பயணப் பெட்டிகளில் ரூ.104 கோடி தலையணை, போர்வை திருட்டு

2 mins read
29d92064-ef9d-4f80-bc66-ff07c206013f
தினமும் எட்டு லட்சம் பேர் குளுகுளு ரயில் பெட்டிகளில் பயணம் செய்யும் நிலையில், ஆயிரத்தில் ஒருவர் திருட்டில் ஈடுபடுவதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

புதுடெல்லி: ரயில்களின் குளுகுளு பயணப் பெட்டிகளில் இருந்து நான்கு ஆண்டுகளில் 1.27 கோடி எண்ணிக்கையிலான போர்வை, துண்டு போன்ற பொருள்கள் திருடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்றுக்குப் பின்னர் ரயில்களில் போர்வைகளும், படுக்கை விரிப்புகளும் வழங்கும் வழக்கம் 2022 ஜனவரி முதல் மீண்டும் தொடங்கியது.

அப்போது முதல் இவ்வாண்டு மே மாதம் வரை, ஏறத்தாழ நாலரை ஆண்டுகளில் ரயில்களில் திருட்டுபோன போர்வை, தலையணை பற்றிய விவரங்கள் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டுள்ள பதிலில் அடங்கியுள்ளன.

மொத்தமுள்ள 18 ரயில்வே கோட்டங்களில் 16ன் 54 பிரிவுகளிடமிருந்து த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தித்தாள் பெற்றது.

நாடு முழுவதும் இந்தியன் ரயில்வேக்குச் சொந்தமான ரயில்களின் குளுகுளு ஏசி பெட்டிகளில் தினமும் ஏறத்தாழ 8 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். அவர்களுக்கு படுக்கை விரிப்புகள், போர்வை, தலையணை, தலையணை உறை, முகம் துடைக்கும் துண்டு ஆகியன வழங்கப்படுகின்றன.

அவற்றைப் பயன்படுத்திய பின்னர் மீண்டும் ரயில் பெட்டியிலேயே வைத்துவிட வேண்டும். ஆனால், ஆயிரத்தில் ஒரு பயணி அந்தப் பொருள்களில் குறைந்தபட்சம் ஒன்றைத் தம்முடன் எடுத்துச் சென்றுவிடுவது தெரியவந்துள்ளது.

அந்த வகையில் நான்கு ஆண்டுகளில் மட்டும் 1.27 கோடிப் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

அதன் மூலம், அத்தகைய துணிகளைத் தயாரித்து வழங்கும் குத்தகையாளர்களுக்கு நான்கு ஆண்டுகளில் ரூ.104.51 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

அதிகமாக, முகம் துடைக்கும் துண்டுகள் களவுபோகின்றன. நான்கு ஆண்டு காலத்தில் 46.5 லட்சம் துண்டுகளைக் காணவில்லை. அதேபோல, 41 லட்சம் படுக்கை விரிப்புகள் திருடப்பட்டுள்ளன. தலையணை உறைகளையும் பயணிகள் விட்டுவைக்கவில்லை. 23.5 லட்சம் உறைகளை அவர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர்.

இந்தத் திருட்டுகள் இதற்கு முந்திய நான்கு ஆண்டுகளுடன் ஒப்புநோக்க, 56 விழுக்காடு அதிகம் என்கின்றன தரவுகள்.

குறிப்புச் சொற்கள்