புதுடெல்லி: இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளை விற்றதில் வங்கிகளுக்கு 14,000 கோடி ரூபாய் கிடைத்ததாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் துணை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 17) பதிலளித்து அவர் பேசினார்.
அப்போது, பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத்துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் மொத்தம் ரூ.22,280 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதிகபட்சமாக விஜய் மல்லையாவின் ரூ.14,131.16 கோடி மதிப்பிலான சொத்துகளும் அவற்றில் அடங்கும் என்றார் அவர்.
மேலும், நீரவ் மோடி வழக்கில் ரூ.1,052.58 கோடி, மெஹுஸ் சோக்ஸி வழக்கில் ரூ.2,565.90 கோடி மதிப்பிலான சொத்துகளையும் அமலாக்கத்துறை மீட்டுள்ளதாக அவர் தமது பதிலில் குறிப்பிட்டார்.