அமராவதி: ஆந்திராவில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான புதிய ஆட்சி அமைந்து, ஓராண்டு நிறைவடைந்ததை அடுத்து, ‘தல்லிக்கு (தாய்) வந்தனம்’ திட்டத்தை அவர் அறிவித்துள்ளார்.
இதன்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களின் தாயாரது வங்கிக் கணக்கில் கல்வித்தொகையாக ரூ.15,000 செலுத்தப்படும். இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவியர் பயனடைவர்.
கடந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ‘சூப்பர் சிக்ஸ்’ என்ற பெயரில் ஆறு வாக்குறுதிகளைச் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி அறிவித்திருந்தது. அவற்றுள், இந்தக் கல்வி உதவித்தொகை திட்டமும் ஒன்றாகும்.
இலவச எரிவாயு உருளை, அண்ணா மலிவு விலை உணவகம், மகளிர் இலவச பேருந்துப் பயணம் உள்ளிட்ட திட்டங்களை அக்கட்சி முன்வைத்துப் போட்டியிட்டது.
ஆந்திராவில் ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கல்வி உதவித் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
இத்திட்டத்துக்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.