வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ.1,800 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது வழக்கு

வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு ரூ.1,800 கோடி இழப்பு: அனில் அம்பானி மீது வழக்கு

2 mins read
bad95d0d-c7b9-41d3-a02f-0107a592a613
ஏமாற்றுதல், குற்றச் சதி ஆகிய பிரிவின்கீழ் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் மற்றம் அனில் அம்பானி மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. - கோப்புப் படம்: என்டிடிவி

புதுடெல்லி: ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (இபிஎஃப்ஓ) ரூ.1,816.22 கோடி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் தலைவர் அனில் அம்பானி மீது மத்திய புலன்விசாரணைப் பிரிவு (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.

இதனை அதிகாரிகள் சனிக்கிழமை (ஆகஸ்ட் 1) தெரிவித்தனர்.

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கடந்த 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் வெளியிட்ட கடன் பத்திரங்களில் ரூ.2,500 கோடி முதலீடு செய்தது.

அந்தக் கடன் பத்திரங்கள் 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் முதிர்ச்சியடைய வேண்டியவை. ஆனால், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் முறைகேடான பரிவர்த்தனைகள் மூலம் வேறு இடங்களுக்கு முதலீட்டுப் பணத்தைத் திருப்பியதால், முதிர்வு காலத்தில் பணத்தைத் திரும்பச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது.

இதனால் இபிஎஃப்ஓவுக்கு மொத்தமாக ரூ.1,816.22 கோடி இழப்பு ஏற்பட்டதாக சிபிஐயிடம் புகார் தரப்பட்டது.

அதன் அடிப்படையில், ஏமாற்றுதல், குற்றச் சதி மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு தேவையற்ற இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றஞ்சாட்டி, அமைச்சு ஜூலை 21ஆம் தேதி அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பாக அதன் அதிகாரி மூலம் புகார் பதிவு செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

ஆனால், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்று அனில் அம்பானி மறுத்துள்ள அறிக்கையை அவரது பேச்சாளர் வெளியிட்டுள்ளார்.

“சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம் தொடர்பானது. அம்பானி 2005 முதல் நவம்பர் 2021 வரை அதன் செயல்சாரா இயக்குநர் குழுவின் தலைவராக இருந்தார்.

“ஆனாலும், அனில் அம்பானி எந்தவொரு தவறும் செய்யவில்லை என மறுக்கிறார்,” என்றார் அந்தப் பேச்சாளர்.

குறிப்புச் சொற்கள்