அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000: ஆம் ஆத்மி தேர்தல் வாக்குறுதி

1 mins read
a89f0131-caa4-468b-8ecf-a4d659ded908
ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். - படம்: இந்திய ஊடகம்

டெல்லி: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம் ரூ.18,000 உதவித்தொகை வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

2025ஆம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மகளிருக்கு மாதம் ரூ.1000, ஜங்புரா தொகுதிக்கான கல்வி எனத் தொடர்ச்சியாகத் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகிறார் கெஜ்ரிவால்.

இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்தக் கோயில் அர்ச்சகர்களுக்கு மற்றும் குருத்வாராவின் கிராந்திகளுக்கு மாதாந்திர உதவித் தொகையாக ரூ.18,000 வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

அர்ச்சகர்கள் மற்றும் கிராந்திகள் நமது சமூகத்தின் முக்கிய அங்கம். ஆனால் அவர்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்ட பிரிவினராகவே உள்ளனர் என்று கெஜ்ரிவால் குறிப்பிட்டார்.

நாட்டிலேயே முதன்முறையாகக் கிராந்தி சமூகத்திற்கு ஆதரவளிக்கும் திட்டமான “பூஜாரி கிராந்தி சம்மன் யோஜனா” திட்டத்தை ஆம் ஆத்மி அறிமுகப்படுத்த உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் அவர்கள் உதவித்தொகையாக ரூ. 18,000 பெறுவார்கள். இந்தத் திட்டத்திற்கான பதிவு செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 31) முதல் தொடங்கும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்