போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித்துறை, ஊழல் சொத்துகளைக் கைப்பற்றும் லோக் ஆயுக்தா சிறப்பு காவல்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (டிசம்பர் 20) போபாலில் லோக் ஆயுக்தா சோதனையின்போது, போக்குவரத்துத் துறையின் முன்னாள் காவலர் ஒருவரின் வீட்டில் கட்டுக்கட்டாக 200 ரூபாய் நோட்டுகள் சிக்கின. அவற்றின் மொத்த மதிப்பு 2.85 கோடி ரூபாய் என அதிகாரிகள் கூறினர்.
ரொக்கப் பணத்துடன் 40 கிலோ வெள்ளியும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கமும் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
மத்தியப் பிரதேச போக்குவரத்துத் துறையில் காவலராக வேலை செய்தவர் ஓராண்டுக்கு முன்னர் அந்த வேலையில் இருந்து விலகி சொத்துச் சந்தை வர்த்தகம் புரிந்ததாக லோக் ஆயுக்தா அதிகாரிகள் கூறினர்.
பணியில் இருந்தபோது சட்டவிரோதமாகப் பெற்ற பணத்தை அந்த வர்த்தகம் மூலம் கிடைத்ததாக அந்த முன்னாள் காவலர் நாடகம் ஆடியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அவர் உண்மையிலேயே ஈட்டிய வருமானத்துடன், பிடிபட்டுள்ள சொத்துகள் பொருந்தவில்லை என்று கூறிய மூத்த அதிகாரி ஒருவர், விசாரணை தீவிரமாக நடைபெறுகிறது என்றும் மேலும் சில சொத்துகள் பிடிபடக்கூடும் என்றும் தெரிவித்தார்.