திருமலைக்கு வரும்போது இயற்கையாக உயிரிழக்கும் பக்தர்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு

திருமலைக்கு வரும்போது இயற்கையாக உயிரிழக்கும் பக்தர்களுக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு

படம்: இந்து தமிழ் திசை

25 Nov 2026 - 10:02 pm

1 mins read

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வழிபாடு நடத்த வரும் பக்தர்கள் இயற்கையாக மரணம் அடைந்தால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டம் நாட்டிலேயே முதன்முறையாகத் திருமலையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

திருப்பதி கோவில் நிர்வாகம், ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) நிறுவனத்துடன் இணைந்து செயல்படுத்தும் ‘ஸ்ரீவாரி யாத்ர சுரக்ஷா’ திட்டத்தின்கீழ், கடந்த இரண்டு மாதங்களில் சுவாமி தரிசனத்திற்கு வந்து இயற்கையாக உயிரிழந்த 17 பேரில், முதற்கட்டமாக ஏழு பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சத்திற்கான காப்பீட்டு தொகையைக் கோவில் நிர்வாக அதிகாரிகள் வழங்கினர்.

இணையம்வழி முன்பதிவு செய்திருந்தாலும் சரி, அல்லது நேரடியாக வந்து சுவாமியைத் தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மரணம் ஏற்பட்டாலும் சரி, எல்ஐசியுடன் இணைந்து கோவில் நிர்வாகம் காப்பீட்டுத் தொகையை வழங்கும் என அத்திட்டம் குறித்து நிர்வாக அதிகாரி எம். ரவிசந்திரா தெரிவித்துள்ளார்.

மேலும், பக்தர்களுக்கு இலவச சேவை செய்யும் ஸ்ரீவாரி சேவகர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்றும் அவர் கூறினார்.

கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தின்படி, பக்தர்கள் சாலை விபத்தில் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் காப்பீடு வழங்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இதுகுறித்து ஆலோசனை நடத்தி தற்போது இத்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் இதன்மூலம் நாட்டிற்கே முன்னோடியாகத் திருப்பதி கோவில் நிர்வாகம் திகழ்கிறது என்றும் கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கைய்ய சவுத்ரி கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்