புதுடெல்லி: இந்தியாவில் குறைந்தது 40 பொதுத்துறை நிறுவனங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், சில தனியார் பெருநிறுவனங்கள் ஆகியவற்றின் உயரதிகாரிகள் அடங்கிய லஞ்ச மோசடிக் கும்பலை அந்நாட்டின் அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது.
அதன்மூலம், பெருநிறுவனச் சமூகப் பொறுப்புணர்வு நிதியில் (சிஎஸ்ஆர்) பல கோடி ரூபாய் அறக்கட்டளைகள் மூலமாகத் திசைமாற்றிவிடப்பட்டு சுருட்டப்பட்டது தெரியவந்துள்ளது.
மேல்நிலைப் பள்ளிக் கல்வியைப் பாதியில் நிறுத்திவிட்டு, கடந்த முப்பது ஆண்டுகளாகப் போலி மருத்துவராக நடித்து வந்த தர்மேந்திர குமார் சந்திரதேவ் என்பவர் பிடிபட்டதன்மூலம் இந்தக் குற்றச் செயல் அம்பலமாகியுள்ளது.
போலி அறக்கட்டளைகளைப் பதிவுசெய்து, வரிவிலக்கு பெற்று, அவற்றின் பெயரில் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை அவர் நன்கொடையாகப் பெற்றுள்ளார்.
பின்னர், தனக்கான தரகுத்தொகையைப் பிடித்துக்கொண்டு, மீதிப் பணத்தை நன்கொடையளித்த நிறுவனங்களுக்கே ரொக்கமாக அவர் திருப்பித் தந்ததாகச் சொல்லப்படுகிறது.
பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதியை விடுவிப்பதற்காக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு லஞ்சமாகப் பெருந்தொகை கைமாறியதாகக் கூறப்படுகிறது.
இதனடிப்படையில், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், புதுடெல்லி ஆகிய மாநிலங்களின் எட்டு இடங்களில் அக்டோபர் 1ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடிச் சோதனைகளை நடத்தினர்.
அப்போது, பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகளின் உயரதிகாரிகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது குறித்த விவரங்கள், அதற்கான சான்றுகள், ரூ.21 லட்சம் ரொக்கம் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
கணக்கில் காட்டப்பட்ட நிதியைக் கணக்கில் வராத ரொக்கமாக மாற்றுவதற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு நிதி ஒரு வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் நிதி கைமாறியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் அமலாக்கத்துறை மதிப்பிட்டுள்ளது.
கூட்டுசேர்ந்து செயல்பட்ட முகவர்கள், இடைத்தரகர்கள் மூலமாக அந்நிதி அறக்கட்டளைகளுக்கு அனுப்பப்பட்டதும் பின்னர் அங்கிருந்து போலி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதும் சோதனைகளின்போது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் பல நிறுவனங்கள் ஜிஎஸ்டி மோசடி தொடர்பான பல்வேறு விசாரணைகளிலும் சிக்கியுள்ளன.
பல திட்டப்பணிகள் அரைகுறையாகச் செயல்படுத்தப்பட்டதும் அதற்கான தொகை உயர்த்தி மதிப்பிடப்பட்டு, கூடுதல் நிதி போலி நிறுவனங்களுக்குத் திருப்பிவிடப்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
