புதுடெல்லி: இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் மீட்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் ஆன நிலையில் இன்னும் 6,691 கோடி மதிப்பிலான நோட்டுகள் பொதுமக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்து உள்ளது.
2000 ரூபாய் நோட்டுகளின் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதாக 2023 மே 19ஆம் தேதி ஆர்பிஐ அறிவித்தது.
அந்த நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு 2023 அக்டோபர் 7 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இருப்பினும், 2024 டிசம்பர் 31ஆம் தேதி வரை ஏறத்தாழ 98 விழுக்காடு 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே அவ்வாறு மாற்றப்பட்டு மத்திய வங்கிக்குத் திரும்பி உள்ளன.
அறிவிப்பு வெளியாவதற்கு முன்பு வரை 3.56 லட்சம் கோடி ரூபாய் நோட்டுகள் 2000 ரூபாய் நோட்டுகளாக புழக்கத்தில் இருந்தன.
அவற்றில் 98.12 விழுக்காடு நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டு விட்டன. இன்னும் 6,691 கோடி ரூபாய் அளவுக்கு அந்த நோட்டுகள் பொதுமக்கள்வசம் உள்ளன.
அந்த நோட்டுகளை மாற்றிக்கொள்ள இப்போதும் வசதி உள்ளதாக ஆர்பிஐ தெரிவித்து உள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய வங்கியின் 19 அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று 2000 நோட்டுகளை அதற்கு உரியவர்களின் வங்கிக் கணக்கில் சேர்க்க முடியும் என்றும் அது தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.