பெண்களுக்கு ரூ.2,000, ஆண்களுக்கு 2 மதுப்புட்டி: எம்எல்ஏ கோரிக்கை

1 mins read
1af1197f-3545-46e1-89b6-4540631c88e1
எம்எல்ஏ எம்.டி.கிருஷ்ணப்பா. - படம்: ஊடகம்

பெங்களூரு: பெண்களுக்கு மாதந்தோறும் இரண்டாயிரம் ரூபாய் தருவதுபோல், ஆண்களுக்கு இரண்டு மதுப்புட்டிகளைத் தரவேண்டும் என கர்நாடக எம்எல்ஏ பேசியது சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி உறுப்பினர் எம்.டி.கிருஷ்ணப்பா, மாநில அரசு கலால் வரியை உயர்த்தியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

“மக்கள் மது அருந்துவதை தடுத்து நிறுத்த இயலாது. பெண்களுக்கு ரூ.2,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.

“மேலும், இலவசப் பேருந்துப் பயணம், இலவச மின்சாரம் என பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்துமே மக்களின் வரிப்பணத்தின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்.

“எனவே, ஆண்களுக்கும் வாரந்தோறும் இரண்டு மதுப்புட்டிகளை வழங்க வேண்டும். அவர்கள் அதை அருந்தி நிம்மதியாக இருக்கட்டும். ஆண்களுக்கான உதவித்தொகையை வேறு எந்த வகையில் கொடுக்க முடியும்,” என கேள்வி எழுப்பினார் கிருஷ்ணப்பா.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எரிசக்தி துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ், “அடுத்த தேர்தலில் வெற்றி பெற்று உங்கள் கட்சி ஆட்சி அமைக்கும்போது இதைச் செய்யுங்கள். எங்கள் அரசு மக்களை மது அருந்துவதில் இருந்து தடுக்க முற்படுகிறது,” என்றார்.

குறிப்புச் சொற்கள்