புதுடெல்லி: சட்டவிரோதமாகப் பணத்தைப் பரிமாற்றப் பயன்படுத்தப்படும் 19 லட்சம் வங்கிக் கணக்குகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
அவற்றின்மூலம் சட்டவிரோதமாக ரூ.2,308 கோடி பணம் பரிமாற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
எளிதாகப் பணம் ஈட்டலாம் எனக் கூறியோ அல்லது கட்டாயப்படுத்தியோ பிறரது வங்கிக் கணக்குகளைச் சட்டவிரோதப் பணப் பரிமாற்றத்திற்குக் குற்றவாளிகள் பயன்படுத்தலாம்.
அத்தகைய கணக்குகள் வாயிலாக இடம்பெறும் பணப் பரிமாற்றங்களை அடையாளம் காண்பதும் பணத்தை மீட்பதும் ரிசர்வ் வங்கிக்குச் சவாலாக இருந்து வருகிறது.
இணையப் பாதுகாப்பு குறித்தும் இணைய மோசடி குறித்தும் ஆலோசிக்க உள்துறை அமைச்சின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழு செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 11) கூடியபோது அமித்ஷா இவ்விவரங்களைத் தெரிவித்தார்.
இந்தியாவில் மின்னிலக்க முறையில் இடம்பெறும் மோசடிகளைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகளை அடையாளம் கண்டு, அவற்றைத் தொடக்கத்திலேயே முடக்க செயற்கை நுண்ணறிவு உதவும் என்று அவர் சொன்னார்.
அத்தகைய மோசடிக் கணக்குகள் தொடங்கப்படும்போதே அடையாளம் காண ஏதுவாக நிகழ்நேரத்தில் கண்டறியும் ஒரு முறையை உருவாக்க உள்துறை அமைச்சு, இந்திய ரிசர்வ் வங்கியுடனும் மற்ற வங்கிகளுடனும் இணைந்து செயல்பட்டு வருவதாக அமைச்சர் அமித்ஷா கூறினார்.
அவ்வகையில், ரிசர்வ் வங்கியின் புத்தாக்க மையம் ‘மியூல்ஹன்டர் ஏஐ’ எனும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்கிறது.
அது மோசடிக் கணக்குகளை அடையாளம் காண வங்கிகளுக்கும் நிதி நிறுவனங்களுக்கும் உதவும் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே, இணைய மோசடிகள் குறித்து புகார் அளிப்பதற்கான இந்திய இணையக் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தில் (I4C) இதுவரை 143,000க்கும் அதிகமான புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்று திரு ஷா தெரிவித்துள்ளார்.
அம்மையத்தின் பரிந்துரையின்படி, பாதுகாப்புக் காரணங்களுக்காக 805 மோசடிச் செயலிகளும் 3,266 இணையத்தள முகவரிகளும் முடக்கப்பட்டுவிட்டன.

