தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இணைய மோசடி: 10 மாதங்களில் ரூ. 2,140 கோடி இழப்பு

2 mins read
மத்திய வெளியுறவுத் துறையின் இணையப் பிரிவு தகவல்
b6136087-6e87-4420-b716-abc35028c4a9
ஜனவரி 2024 முதல் 92,334க்கும் மேற்பட்ட இணைய மோசடிச் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. - படம்: பிக்சாபே

புதுடெல்லி: கடந்த 10 மாதங்களில் ரூ.2,140 கோடி பணத்தை இணையத்தின்வழி மோசடிக் கும்பல்கள் ஏமாற்றியதாக மத்திய வெளியுறவுத் துறையின் இணையப் பிரிவு அரசாங்கத்திடம் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதன்படி சராசரியாக ஒரு மாதத்தில் ரூ.214 கோடி இழப்பு நேர்ந்ததாக அறிக்கையில் தெரிவித்த அதிகாரிகள், உயர் அதிகாரிகள் போல் மோசடிப் பேர்வழிகள் ஆள்மாறாட்டம் செய்ததாகக் குறிப்பிட்டனர்.

காவல்துறை, சிபிஐ, அமலாக்க இயக்குநரகம், ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றைச் சேர்ந்த அதிகாரிகளாக மோசடிக்காரர்கள் பாசாங்கு செய்து வெளிநாட்டில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிவிட வைத்தனர்.

கம்போடியா, மியன்மார், வியட்னாம், லாவோஸ், தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள பல்வேறு அழைப்பு மையங்கள், மோசடி நடவடிக்கைகளுக்கு முக்கியத் தளங்களாக இயங்கியதாகவும் மின்னிலக்கக் கைது மோசடிகளுக்கும் அவற்றுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டது.

கம்போடியாவில் சீனநாட்டவருக்குச் சொந்தமான சூதாட்டக்கூடங்களில் இந்த மோசடி அழைப்பு மையங்கள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மோசடிச் செயல்பாடுகளின் மையம் வெளிநாடுகளில் இருந்தாலும், மோசடி நடவடிக்கைகளில் 30 முதல் 40 விழுக்காட்டுச் சம்பவங்களின் தடங்கள் இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன.

அறிக்கைப்படி, ஜனவரி 2024 முதல் 92,334க்கும் மேற்பட்ட இணைய மோசடிச் சம்பவங்கள் இந்தியாவில் நடந்துள்ளன. உடனடியாகப் பணத்தை மாற்றாவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்று மிரட்டி ஏமாற்றி வந்துள்ளன, இந்த மோசடிக் கும்பல்கள்.

இதற்கிடையே, மோசடி அழைப்புகள் வந்தாலோ, சந்தேகத்திற்குரிய அழைப்புகளைப் பெற்றாலோ உடனடியாக 1930 என்ற அவசரகால எண்ணில் தொடர்புகொண்டு தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. விரைந்து புகார் அளிப்பதால் இழந்த பணத்தை மீண்டும் மீட்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கூடுதல் இழப்பைத் தவிர்க்க முடியும் என்றும் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்