போதைப்பொருள் வழக்கிலிருந்து இந்தித் திரையுலக நட்சத்திரம் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை விடுவிக்க வேண்டுமெனில் 25 கோடி ரூபாய் தரவேண்டும் என்று ஷாருக் குடும்பத்தினரைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முன்னாள் உயரதிகாரி சமீர் வான்கடே மிரட்டியதாக இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) வழக்குப்பதிவு செய்துள்ளது.
கடந்த 2021 அக்டோபர் மாதம் சொகுசுக் கப்பலில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையை அடுத்து ஆர்யனும் வேறு சிலரும் கைதாயினர்.
அவர்கள் போதைப்பொருள் புழங்கியதாகக் குறிப்பிட்ட திரு வான்கடே, ஊழல், குற்றவியல் ஒழுக்கக்கேடு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி வருகிறார்.
இந்நிலையில், திரு வான்கடே மீதான சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்ஐஆர்), அவரது வெளிநாட்டுப் பயணங்கள் குறித்தும் விலையுயர்ந்த கைக்கடிகாரங்களை வாங்கியது குறித்தும் கூறப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு உயரதிகாரிகள் உட்பட மேலும் நால்வர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
"ஆர்யன் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கூறி, அவரின் குடும்பத்தாரிடமிருந்து ரூ.25 கோடி பணம் பறிக்க சதித்திட்டம் இடம்பெற்றது. பின்னர் ரூ.18 கோடிக்கு உடன்பாடு எட்டப்பட்டு, முதற்கட்டமாக ரூ.50 லட்சம் தரப்பட்டது. பின்னர் அத்தொகையில் ஒரு பகுதி திருப்பித் தரப்பட்டுவிட்டது," என்று சிபிஐயின் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிடிபட்டு, 22 நாள்களைச் சிறையில் கழித்தபின் போதிய சான்றுகள் இல்லை எனக் கூறி, வழக்கிலிருந்து ஆர்யன் விடுவிக்கப்பட்டார்.


